
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் மோகன் ஓ.பி.எஸ் அணியில் இணைந்ததைத் தொடர்ந்து அவர் அதிமுகவிலிருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் எம்.வாடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மோகன் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக அதிமுக வத்தலக்குண்டு ஒன்றிய செயலாளராகவும் தற்போது பிரிக்கப்பட்ட கிழக்கு ஒன்றிய செயலாளராகவும் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பின் அதிமுக உடைந்த போது இவரது மகன் அருண்குமார் ஓ.பி.எஸ் அணியிலும் இவர் அதிமுகவிலும் செயல்பட்டு வந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் மோகன் வீட்டில் நடந்த விசேஷத்திற்கு ஓபிஎஸ் சிறப்பு விருந்தினராக வந்துள்ளார் இதனைத் தொடர்ந்து அதிமுகவிலிருந்து மோகனை நீக்க வேண்டுமென உட்கட்சிக்குள் போர்க்கொடி எழுந்தது. கடந்த சில நாட்களாக மோகன் அதிமுகவிலிருந்து நீக்கப்படலாம் என்ற வதந்தி பரவி வந்த நிலையில் மோகன் அதிரடியாக தனது ஆதரவாளருடன் சென்று ஓபிஎஸ் முன்னிலையில் அதிமுக உரிமை மீட்புக் குழுவில் இணைத்துக் கொண்டார். இதனையடுத்து மோகன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேனி மாவட்டத்திற்கு வருகை தரும் நிலையில், அதிமுகவிலிருந்து நீண்டகாலம் பணியாற்றிய ஒன்றிய செயலாளர் மோகன் ஓபிஎஸ் அணியான எதிர்முகாமிற்கு தாவி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.