AIADMK union leader husband threatens rural development office workers

சேலம் அருகே, ஊரக வளர்ச்சி அலுவலக ஊழியர்களை ஒன்றியக்குழுத் தலைவரின் கணவர் மிரட்டுவதாகவும், நிர்வாக விவகாரங்களில்தலையிடுவதாகவும் பரபரப்பு புகார் கிளம்பியுள்ளது.

Advertisment

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கத்தின் சேலம் மாவட்டச் செயலாளர் ஜான் ஆஸ்டின் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர்கார்மேகத்திடம் ஒரு புகார் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவராகப் பதவி வகிப்பவர் மாரியம்மாள். அதிமுகவைச் சேர்ந்தவர். இவருடைய கணவர், ரவி. இவர், தொடர்ச்சியாக அலுவலக நிர்வாகத்தில் தலையிட்டும், ஊழியர்களிடம் அத்துமீறியும் வருகிறார்.

Advertisment

கடந்த சில நாட்களாக பொறியியல் பிரிவு அலுவலர்களிடம் 'பில்' பட்டியல் விவரங்களை விரைவாகத்தரும்படி நிர்ப்பந்தம் செய்து வருகிறார். பணி மேற்பார்வையாளரை ஒன்றியக்குழுத் தலைவரின் மகன் ஒருமையில் பேசியும் வந்துள்ளார். காழ்ப்புணர்ச்சி காரணமாக அலுவலக கணக்கர்(பொது) மீது லஞ்சம் வாங்குவதாகக் கூறி, ஆட்சியரிடம் பொய் புகார் அளித்துள்ளார். இதனால் அவர் கடும் மன உளைச்சல் அடைந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 27ம் தேதி அலுவலகத்தில் பணியாற்றி வரும் உதவியாளர் சுரேந்திரன் என்பவரை, அனைவர் முன்னிலையிலும் அலுவலகத்தை விட்டு வெளியே செல்லும்படி மிரட்டியுள்ளார். கடந்த காலங்களில் இவருடைய அராஜக போக்கு குறித்து, ஊராட்சிகள் உதவி இயக்குநருக்கு, வட்டார வளர்ச்சி அலுவலரால் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. இருப்பினும், தற்போது வரை தனது போக்கினை மாற்றிக்கொள்ளாமல் ஊழியர்களை மிரட்டி அச்ச உணர்வை ஏற்படுத்தி வருகிறார். அவருடைய போக்கினை மாற்றிக் கொள்ளாமல் இருப்பது, ஊழியர்களிடையே பெருத்த அதிருப்தியையும், அச்ச உணர்வையும் ஏற்படுத்தி உள்ளது.

உதவிப் பொறியாளர், சாலை ஆய்வாளரை அலுவலகம் விட்டு வெளியே வரும்போது ஆளை விட்டு அடித்து விடுவோம் என மிரட்டியுள்ளார். ஒன்றியக்குழுத் தலைவர் மட்டும் நிர்வாகம் செய்யாமல், அவருடைய குடும்பத்தினர் அனைவரும் நிர்வாகத்தில் தொடர்ச்சியாகத்தலையிட்டு, நிர்வாகத்திற்கும் ஊழியர் நலனுக்கும் எதிராகச் செயல்பட்டு வருகின்றனர். எனவே, அவர் மீது உரிய சட்ட ரீதியான நடவடிக்கைகள்மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறியுள்ளனர். இது ஒருபுறம் இருக்க, ஒன்றியக்குழுத் தலைவரின் கணவர் போக்கைக் கண்டித்து ஆகஸ்ட் 2 ஆம் தேதி காடையாம்பட்டியில் ஆர்ப்பாட்டம்நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.