Skip to main content

வழக்கை நிராகரிக்க கோரிய அதிமுகவினர்... சசிகலா பதிலளிக்க அவகாசம் வழங்கிய நீதிமன்றம்!

Published on 20/07/2021 | Edited on 20/07/2021

 

AIADMK seeks dismissal of case ... Court allows Sasikala to respond

 

அதிமுக பொதுக்குழு கூட்டத்தைச் செல்லாது என அறிவிக்கக் கோரி தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக நிர்வாகிகள் தாக்கல் செய்த மனுவிற்குப் பதிலளிக்க சசிகலாவிற்கு அவகாசம் வழங்கி சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெ. ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக 2016ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி மரணமடைந்தார். அதன் பின்னர் பொதுச் செயலாளராக வி.கே. சசிகலாவையும் துணைப் பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரனையும் அதிமுகவினர் ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர். 

 

இதன் பின்னர் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா நான்கு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் இருந்தபோது, 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அந்தப் பொதுக்குழுவில் அதிமுக நிர்வாகிகளாக சசிகலா, தினகரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

 

பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் குறிப்பாக தங்களைக் கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தனர். பின்னர் இந்த வழக்குகள் சென்னை நகர சிவில் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. கடந்தமுறை இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, அமமுக என்ற கட்சியைத் தொடங்கி நடத்திவருவதால் இந்த வழக்கில் இருந்து தான் விலகிக்கொள்வதாக டி.டி.வி. தினகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

 

சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி அதிமுக நிர்வாகிகள் சார்பில் மனு தாக்கல் செய்யபட்டது. இந்த மனுவிற்கு சசிகலா பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது. இந்த வழக்கு மீண்டும் நீதிபதி ரவி முன்பு விசாரணைக்கு வந்தபோது, சசிகலா தரப்பில் பதில் அளிக்க கால அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, வழக்கு விசாரணையை ஜூலை 30ஆம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்