ADVERTISEMENT

ஜிப்மர் வேலைவாய்ப்புகளில் தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி அதிமுக ஆர்ப்பாட்டம்!

10:29 PM Nov 21, 2022 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதுச்சேரி மட்டுமல்லாது தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான நோயாளிகளும் நாள்தோறும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இயக்குனர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், ஊழியர்கள் போன்ற பணிகளில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களை அதிகம் நியமனம் செய்வதாக குற்றச்சாட்டு நிலவுகிறது. இதனால் தமிழ் மட்டுமே தெரிந்த நோயாளிகள் - மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் இடையே நேரடி தொடர்பு இல்லாததால் நோயாளிகள் அவதியடைகின்றனர்.

இதையடுத்து ஜிப்மர் மருத்துவக் கல்லூரி பணி இடங்களில் புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரி மாநில அ.தி.மு.க சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஜிப்மர் வேலைவாய்ப்புகளில் புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் அன்பழகன் அவர்கள் பேசுகையில் " ஜிப்மர் வேலை வாய்ப்பு விஷயத்தில் பறிபோகும் மாநில உரிமையை தடுத்து நிறுத்த வேண்டும். இந்தியாவில் தலை சிறந்த மருத்துவமனை என்ற நிலை மாறி மெல்ல மெல்ல அழிவு பாதைக்கு ஜிப்மர் மருத்துவமனை சென்று கொண்டிருப்பதை தடுக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் தலையாய கடமையாகும். தற்போது மருத்துவர்கள், செவிலியர்கள், டெக்னீஷியன்கள் மற்றும் பல்வேறு பணியாளர்களுக்கு அகில இந்திய அளவில் தேர்வு நடத்தி பணி நியமனம் செய்யப்படுகிறது. வேலை வாய்ப்பில் புதுச்சேரி மாநிலத்திற்கு தனி இட ஒதுக்கீடு இல்லை. நம் மாநிலத்தில் படித்த இளைஞர்களுக்கும், இளைஞிகளுக்கும் வேலை பாதிக்கப்படுகிறது. ஜிப்பர் மருத்துவ கல்வியில் மொத்தமுள்ள 243 இடங்களில் எம்.பி.பி.எஸ் படிப்பிற்கு 54 இடங்கள் அதாவது 26.5 சதவீதம் புதுச்சேரி மாநிலத்திற்கு இட ஒதுக்கீடாக வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவ கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கும் ஜிப்மர் நிர்வாகம் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவதில்லை.

தற்போது 433 பணியிடங்களுக்கு அகில இந்திய அளவில் செவிலியர் தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்திய அளவில் தேர்வு நடத்தப்படுவதால் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில செவிலியர் படித்துள்ளவர்களுடன் நம் மாணவிகள் போட்டியிடும் நிலை ஏற்படுவதால் நம் மாநிலத்தில் செவிலியர் படிப்பு படித்தவர்களுக்கு ஜிப்மரில் வேலை வாய்ப்பு தடுக்கப்படுகிறது. மருத்துவ கல்வியில் 26.5 சதவீதம் புதுச்சேரிக்கு இடஒதுக்கீடு வழங்குவது போன்று வேலை வாய்ப்பிலும் 26.5 சதவீதம் இடங்கள் வழங்கினால் நம் மாநிலம் சார்ந்த சுமார் 115 செவிலியர் படிப்பு படித்த பிள்ளைகளுக்கு வேலை கிடைக்கும். குருப்-டி பணி புரியும் ஒப்பந்த பணியாளர்களாக கூட வட மாநிலத்தை சேர்ந்தவர்களை இங்கு நியமிக்கும் சூழ்நிலை உள்ளது. தமிழ் மொழி பேசும் புதுச்சேரியில் உள்ள மருத்துவமனையில் செவிலியர் பணிக்குக் கூட வேறு மொழி பேசுபவர்களை பணியில் அமர்த்துவதால் தமிழ் பேசும் புதுச்சேரி, தமிழக மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

ஒட்டுமொத்தத்தில் புதுச்சேரி மாநிலத்தின் மாநில உரிமை ஜிப்பர் நிர்வாகத்தால் பறிக்கப்படுவதை முதல்வர், துணை நிலை ஆளுநர் மற்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சரின் கவனத்திற்கு ஏற்கனவே கொண்டு சென்றுள்ளோம். மீண்டும் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மூலம் அரசின் கவனத்திற்கு நம்மாநில மக்களின் நலன்களை, உரிமைகளை எடுத்து காட்டுகிறோம். இது சம்பந்தமாக துணைநிலை ஆளுநரும், முதலமைச்சரும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் வலியுறுத்தி ஜிப்மரில் அனைத்து வேலை வாய்ப்புகளிலும் குறைந்தது 25 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்று தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை புதுச்சேரி மாநிலத்திற்கு தனி இட ஒதுக்கீடு இல்லாமல் தற்போது நடைபெறும் செவிலியர் பணி நியமனத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்" என கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரி கிழக்கு மற்றும் மேற்கு மாநில நிர்வாகிகள் மாநில அவைத் தலைவர் அன்பானந்தம், மாநில பேரவை செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ பாஸ்கர், முன்னாள் மாநில செயலாளர் நடராசன், மாநில இணைச் செயலாளர்கள் வீரம்மாள், மகாதேவி, கணேசன், திருநாவுக்கரசு, மாநில துணைத் தலைவர் ராஜாராமன், மாநில பொருளாளர் ரவிபாண்டுரங்கன், மாநில துணைச் செயலாளர்கள் கருணாநிதி, கணேசன், வி.கே.மூர்த்தி, குணசேகரன், கிருஷ்ணமூர்த்தி, காந்தி, நாகமணி, சேரன், மணவாளன், குமுதன், மாநில எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர்கள் பாண்டுரங்கன், சிவலயா இளங்கோ, மாநில எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் மருதமலையப்பன், மாநில மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, மாநில மகளிர் அணி செயலாளர் விஜயலட்சுமி, மாநில மாணவர் அணி செயலாளர் பிரதீப், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ராமலிங்கம், மீனவரணி செயலாளர் ஞானவேல், விவசாய அணி செயலாளர் சக்கரவர்த்தி, மாநில இலக்கிய அணி செயலாளர் ராமசாமி, மாநில அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் செல்வம், மாநில வர்த்தக அணி செயலாளர் முத்துராஜீலு, மாநில தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தினேஷ்குமார் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT