










தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அபார வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்துள்ளது. தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல் முறையாகப் பதவியேற்றுள்ளார். அதேபோல் முதல்வருடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக கூட்டணியானது மொத்தம் 75 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் கடந்த மே மாதம் 7 ஆம் தேதி அன்று மாலை கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. அதில் எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்வது குறித்து நீண்ட நேரம் ஆலோசிக்கப்பட்டும் எந்த முடிவும் எட்டப்படாமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
அதனால் இன்று (10.05.2021) காலை 9:30 மணிக்கு சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களிம் கூட்டம் மீண்டும் நடைபெற்றது. இந்த கூட்டமானது சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. பின்னர் எடப்பாடி பழனிசாமி தமிழக எதிர்க்கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி. வேலுமணி, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் தனபால் உள்ளிட்ட அனைத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.