
பாரதிய ஜனதா கட்சி தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் எதிராக செயல்பட்டு வருவதாக காங்கிரஸ் கமிட்டியின் தேசிய செயலாளர் சஞ்சய் தத் குற்றம் சாட்டியுள்ளார்.
ஈரோட்டில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தேர்தல் ஆலோசனை கூட்டம் 28ஆம் தேதி மாலை நடந்தது. கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட தலைவர் 'மக்கள்' ராஜன் தலைமை தாங்கினார். இதில், காங்கிரஸ் கமிட்டியின் தேசிய செயலாளரும், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் பொறுப்பாளருமான சஞ்சய் தத் கலந்து கொண்டார். முன்னதாக சஞ்சய் தத் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது; "பீகார் மாநிலத்தில் பா.ஜ.க கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் நிதிஷ்குமார் ஆட்சிக்கு வந்தால் 6 மாதங்களில் வேலை வாய்ப்புகளை தருவதாகப் பொய் வாக்குறுதிகளை கொடுத்து வருகிறார்.
பீகாரை பொறுத்தவரை காங்கிரஸ் கூட்டணிதான் மகத்தான வெற்றி பெறும். நாட்டில் கரோனா நோய்த் தொற்று பிரச்சனை, ஜிஎஸ்டி.,யால் வணிகர்கள் தொழிற்சாலைகளையும், கடைகளையும் மூடும் நிலை, வேலை இல்லா திண்டாட்டம் போன்ற எவ்வளவோ பிரச்சனைகள் உள்ளது. இந்தப் பிரச்சனைகளை திசை திருப்பும் வகையில், மலிவான விளம்பரத்தை பா.ஜ.க தேடி வருகிறது. தமிழகத்தில் அ.தி.மு.க அரசும், பா.ஜ.கவினரும் மக்களிடம் தவறான வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர்.
தமிழக மக்கள் விழிப்புணர்வுடன் உள்ளதால், நம்ப மாட்டார்கள். தமிழகத்தில், கடந்த மக்களவை தேர்தல்லில் தி.மு.க கூட்டணி எப்படி மாபெரும் வெற்றி பெற்றதோ, அதேபோல், வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்.
பா.ஜ.க அரசு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு, தவறான ஜி.எஸ்.டி கொள்கை, பெட்ரோல் டீசல் விலை உயா்வு, கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த தவறிய நிர்வாகத்தால் நாட்டு மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், தற்போது விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் பாதிப்படையச் செய்யும் வகையில், புதிதாக வேளாண் சட்ட மசோதாவை இயற்றியுள்ளனர்.

இச்சட்டம் விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் எதிரானது. அதனால்தான் காங்கிரஸ் சார்பில் இச்சட்டத்தை திரும்பப் பெற கோரி நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறோம். பா.ஜ.க தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் எதிராகச் செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.க.வினர் அவர்களது ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக பா.ஜ.கவினரிடம் அமைதி காத்து வருகின்றனர். இதைத் தமிழக மக்கள் நன்றாக உணர்ந்துவிட்டனர். இதனால், தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணிதான் மகத்தான வெற்றிபெறும்." என சஞ்சய் தத் கூறினார்.