
உலகமே ஆன்லைனுக்கு மாறிக்கொண்டிருக்கும் நேரத்தில், ஆன்லைன் என்றாலே மோசடி செயல் தான் என்கிற எண்ணமும் சேர்ந்தே வருகிறது. இந்த நேரத்தில் திருச்சி அதிமுக ஆன்லைன் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ரவிசந்திரன் என்பவரை திடீர் என திண்டுக்கல் போலீசார் நேற்று கைது செய்திருப்பது எல்லோருக்கும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
முதல் கட்டமாக அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்திருக்கிறார் என்று தகவல் வெளியானதும், என்ன மாதிரியான புகார் என்று விசாரித்தோம்..
சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் எஸ்.பி. சக்திவேலிடம் நத்தம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார், பாலசுப்ரமணியன் ஆகியோர் திருச்சி பாலக்கரை படையாச்சி தெருவை சேர்ந்த ரவிசந்திரன் என்பவர் அரசாங்கமே எங்க அரசாங்கம் தான் வேலை வாங்கி தருகிறேன் என்று சொல்லி ஏமாற்றி உள்ளதாக புகார் கொடுத்திருக்கிறார்கள். இதன் அடிப்படையில் இன்ஸ் வினோதா, எஸ்.ஐ.ரெய்கான் ஆகியோரை விசாரிக்க சொல்லி உத்தரவிட்டிருக்கிறார்.
திண்டுக்கல் குற்றபிரிவு போலீசார் விசாரணையில் ரவிசந்திரன் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவில் மாவட்ட செயலாளராக இருப்பதால் நடப்பது எங்க ஆட்சி, அரசாங்கத்தில் எந்த வேலையும் வாங்கி தருகிறேன். எதுக்கும் ஒரு விலை இருக்கிறது, எனக்கு அமைச்சர் முதல் எல்லோரும் பழக்கமானவர்கள் தான். நான் சொன்னா உடனே வேலை கிடைக்கும் என்று ஆசை வார்த்தை சொல்லி 2015ம் ஆண்டு நத்தம் பகுதியை சேர்ந்தவர்கள் 11 பேரிடம் ரூ.63 லட்சம் வாங்கியிருக்கிறார்.
அதிமுக கட்சியில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் இருப்பதால் அமைச்சர்கள் எல்லோருக்கும் நெருக்கமாக இருப்பார் என்று நினைத்து பணம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் வாங்கினதோடு சரி... இப்ப நடக்கும், அப்ப நடக்கும், ஆட்சி மாற்றம் ஏற்பட்டும், திரும்ப எங்க ஆட்சி தான் வந்திருக்கு, நாங்க பண்ணிடுவோம் என்று சொல்லி சொல்லி 3 வருடம் ஆகியும் எந்த அரசாங்க வேலையும் வாங்கி கொடுக்கவில்லை. கொடுத்த பணத்தை திரும்ப கேட்டதற்கு பணம் எல்லாம் கொடுக்க முடியாது. இனி பணம் கேட்டு வந்தீங்க அவ்வளவு தான் என்று மிரட்டியிருக்கிறார். அதன் அடிப்படையிலே கொடுத்த புகாருக்கு வழக்கு பதிவு செய்திருக்கிறார்.
கடந்த ஆட்சியில் மனோகரன் கொறடாவாக இருந்த போது தான் ரவிசந்திரன் அவருடைய தீவிர ஆதரவாளராக மாறினார். அதன் பிறகு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூடவே இருந்தார். கட்சி பிரச்சனைக்கு பிறகு தினகரன் அணியிலே கொஞ்ச காலம் இருந்தவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மீண்டும் அதிமுகவில் இணைத்துக்கொண்டார்.