/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/b156.jpg)
வழக்குகள், வாதங்கள், விசாரணைகள் என பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கிடையே வானகரத்தில் இன்று அதிமுக பொதுக்குழு நடைபெற்று முடிந்தது. மறுபுறம் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதிமுக அலுவலகத்தைப் பூட்டி வருவாய் துறையினர் சீல் வைத்தனர். சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்த எடப்பாடி பழனிசாமி பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்பொழுது ஓபிஎஸ் குறித்தும், அவரது செயல்பாடுகள் குறித்தும் பல்வேறு விமர்சனங்களை வைத்த எடப்பாடி பழனிசாமி, ''ஆட்சியில் இருக்கும் ஸ்டாலின் தலைமையிலான அரசாங்கமும், அவரோடு உறவு வைத்திருந்த முன்னாள் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் இணைந்து இந்த கொடூரமான சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். புகாரளித்தும் காவல்துறை சரியான பாதுகாப்பினை அளிக்கவில்லை'' எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சென்னை காவல்துறை சார்பில் கொடுக்கப்பட்ட நோட்டீஸில், 'அதிமுகவின் இருதரப்பு தலைவர்கள், மற்றும் அவர்களது ஆதரவாளர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. சட்ட ஒழுங்கை கருத்தில் கொண்டு இருதரப்பு தலைவர்கள் வீடுகளுக்கும் தக்க காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சீல் வைக்கப்பட்டுள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு மயிலாப்பூர் வட்டாட்சியர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுக தலைமை அலுவலக பிரச்சனை தொடர்பாகவும், கட்சி அலுவலகம் யார் கையில் உள்ளது என்பதை முடிவு செய்யவும், இருதரப்பினரும் வரும் 25 ஆம் தேதி ஆஜராக வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)