Skip to main content

அண்ணாமலை vs அதிமுக; ‘அண்ணா’வால் முறிந்த பாஜக கூட்டணி!

Published on 18/09/2023 | Edited on 18/09/2023

 

AIADMK has announced that it is not in alliance with BJP

 

இந்தியாவில் கூட்டணிக் கட்சிகளாக இருக்கும் அதிமுகவும், பாஜகவும் தமிழகத்தில் மோதிக்கொள்கின்றன. சமீப காலமாக அதிமுக - தமிழக பாஜக இடையே  வார்த்தை போர் நிலவி வருகிறது. தமிழக தலைவர் அண்ணாமலை, அதிமுக முன்னாள் தலைவரான ஜெயலலிதா குறித்து பேசியது அக்கட்சி தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதிமுக தலைவர்கள் பாஜகமீதும், அண்ணாமலை மீதும் சரமாரியாக விமர்சனங்களை முன்வைத்தனர். பின்னர் இருகட்சித் தலைவர்களையும் அழைத்து டெல்லி தலைமை பேசிய பிறகு வார்த்தை போர் சற்று தணிந்திருந்தது. இது தொடர்பாக அண்ணாமலை மன்னிப்பு கேட்டதாகவும் கூறப்படுகிறது. 

 

இந்த நிலையில் சமீபத்திய நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அண்ணாமலை, பேரறிஞர் அண்ணா குறித்துப் பேசியிருந்தார். அதில், “1956 மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், ஒரு தமிழ் மாநாடு 10 நாட்களுக்கு நடைபெறுகிறது. முதல் நாளில் ராஜாஜி பேசுகிறார், அடுத்த நாள் வேறு ஒருவர் பேசுகிறார், இப்படி ஒவ்வொரு நாளும் ஒருவர் பேசுகிறார். அப்படியாக நான்காவது நாள் பி.டி. ராஜன் பேசுகிறார். ஆனால் அப்போது பி.டி.ராஜன், அழைப்பிதழில் பெயரே இல்லாத அண்ணாதுரையை மேடைக்கு அழைத்துச் செல்கிறார். அப்போது மேடையில் மணிமேகலை என்கிற குழந்தை சங்க இலக்கிய பாடலை பாடுகிறார். உடனே மைக்கை எடுத்த அண்ணாதுரை, ‘இந்த குழந்தை அருமையாகப் பாடியது; இதுவே கற்காலமாக இருந்தால், உமையவள் பாலை குடித்துத்தான் இந்த மணிமேகலை குழந்தை அருமையாக பாட்டுப்பாடினால் என்று கட்டுக் கதையைக் கட்டிவிட்டிருப்பார்கள். நல்ல வேலை நமக்கெல்லாம் பகுத்தறிவு வந்துவிட்டதால் மக்கள் இதனை நம்பமாட்டார்கள்’ என்று பேசுகிறார். 

 

இதையடுத்து ஆறாவது நாள் பேசவேண்டிய முத்துராமலிங்க தேவர் , ஒரு நாளைக்கு முன்கூட்டியே மேடைக்கு ஏறி, ‘சிவபுராணம் ஏற்றப்பட்ட மதுரை மீனாட்சி அம்மான் கோவில் வளாகத்தில்  வந்து யார் உமையவளைப் பற்றி தவறாகப் பேசியது.(எல்லாரும் பயத்தில் இருக்கிறார்கள். பி.டி. ராஜன் வாயிலிருந்து வார்த்தையே வரவில்லை; அண்ணாதுரையை மதுரையில் மறைத்து வைத்தனர். அவரால் வெளியே போகமுடியவில்லை. முத்துராமலிங்க தேவர் கோவமாக இருக்கிறார்) 

 

இன்னும் ஒரு முறை, நான் கடவுளை நம்ப மாட்டேன், கடவுளை இல்லை என்று சொல்பவன் கடவுளை நம்புகிறவர்களைப் பற்றி பேசினார்கள் என்றால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இதுவரை பாலிலேதான் அபிஷேகம் நடித்திருக்கிறது; கடவுளை நம்புகிறவர்களைத் தவறாகப் பேசினாள் ரத்திலேயே அபிஷேகம் நடக்கும் என்றார் முத்துராமலிங்க தேவர். அதன் பிறகு பிடி.ராஜன், அண்ணாதுரை மன்னிப்பு கேட்டுவிட்டு ஓடிவந்தார்கள்” என்றார்.

 

அண்ணாமலையின் இந்த பேச்சும் அண்ணா திமுகவினரை(அதிமுக) கடும் கோபத்திற்கு உள்ளாகியது. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், “அண்ணாமலையைப் பொறுத்தவரையில், தனது கட்சியை வளர்க்க எப்படி வேண்டுமென்றாலும் பேசட்டும். மறைந்த தலைவர்களைக் கொச்சைப்படுத்துவதைக் கைவிட வேண்டும். ஏற்கனவே ஜெயலலிதாவைப் பற்றி விமர்சனம் செய்து, அதன் பின்னர் கடும் கண்டனங்கள் எழுந்ததால், திரும்பவும் அண்ணாமலை மன்னிப்பு கேட்டார். மறைந்த பேரறிஞர் அண்ணா இன்று இல்லை என்றாலும் உலகத் தமிழர்களால் போற்றப்படக்கூடிய மாபெரும் தலைவர். அவரைக் கொச்சைப்படுத்தும் விதமாக நடக்காத சம்பவம் ஒன்றை நடந்ததாக கருத்து தெரிவிக்கிறார். முத்துராமலிங்க தேவரும், அண்ணாவும் நெருங்கிய நண்பர்கள்” என்றார்.

 

செல்லூர் ராஜு, “அண்ணாவைப் பற்றி கேலி பேசுகிறார்கள். ஒரு இறந்த தலைவரைப் பற்றி கேலி கிண்டல் செய்து பேசுகிறவன் இழிவானவன். இழிவாகப் பேசுவது இழி பிறவி தான். அரசியலில் நீ எங்கேயோ இருக்கலாம். ஆளுங்கட்சியின் தற்காப்பில் பேசலாம். ஆனால் அண்ணாவைப் பற்றி யார் தவறாகப் பேசினாலும் அவர்களுடைய நாக்கு துண்டாகி விடும்” என்றார் ஆவேசமாக.

 

சி.வி. சண்முகம், “பேரறிஞர் அண்ணா இல்லையென்றால் தமிழகம் இல்லை. ஆறு சதவீத மக்கள் மட்டுமே நாட்டை ஆண்டிருப்பார்கள். மீதம் உள்ள 93% தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் இன்றைக்கு கூலித் தொழிலாளியாக இருந்திருப்போம். இன்றைக்குத் தமிழகம் முன்னேறி இருப்பதற்குக் காரணம் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா. ஆனால் இந்த சரித்திரம் தெரியாமல் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான், அண்ணாமலை அண்ணாவை விமர்சனம் செய்து பேசியதுடன் தரக்குறைவாகவும் பேசி உள்ளார்” என்றார்.

 

இப்படி அதிமுகவிலிருந்து அடுத்தடுத்து கண்டன குரல்கள் ஒலித்துக்கொண்டிருக்க, அண்ணாமலையோ, “அண்ணாவை நான் எங்கும் தவறாகப் பேசவில்லை. சரித்திரத்தில் அந்த சம்பவத்தை நான் எடுத்துக்காட்டியுள்ளேன். அதில் முத்துராமலிங்க தேவர் என்ன பேசினார் என்பதை நான் சொல்லியிருக்கிறேன்” என்றார். இப்படி அதிமுக பாஜகவினருக்கும் இடையே சற்று குறைந்திருந்த வார்த்தை போர் அண்ணா குறித்துப் பேசிய பிறகு மீண்டும் வேகமெடுத்துள்ளது. 

 

இந்த நிலையில்தான் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜெயகுமார், “அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. தற்போது இல்லை; கட்சி முடிவையே நான் சொல்கிறேன். தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் பா.ஜ.க.வுக்குத் தான் பாதிப்பு. தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நோட்டாவை கூட தாண்ட முடியாது. பா.ஜ.க.வுக்கு காலே இல்லை; எப்படி தமிழ்நாட்டில் காலூன்றும்? எங்களை விமர்சிக்கும் பா.ஜ.க.வை நாங்கள் ஏன் சுமக்க வேண்டும்? சிங்கக் கூட்டத்தை பார்த்து சிறுநரி அண்ணாமலை ஊளையிடுகிறது; அண்ணாமலையைத் திருத்துங்கள் என்று பா.ஜ.க. மேலிடத்தில் கூறிவிட்டோம்; பா.ஜ.க. தேசிய தலைமை சொல்லியே அண்ணாமலை தனது பேச்சை நிறுத்தாவிட்டால், தாறுமாறாக விமர்சனம் செய்வோம்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பூரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை திறப்பு!

Published on 14/07/2024 | Edited on 14/07/2024
Puri Jagannath temple treasure room opening

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலோடு ஒடிசா மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது பூரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை மற்றும் தொலைந்து போனதாகச் சொல்லப்படும் அதன் சாவி குறித்த விவகாரங்களை பாஜக கையில் எடுத்திருந்தது. இது தொடர்பாக ஒடிசாவில் முன்பு ஆட்சி செய்த பிஜு ஜனதா தள கட்சிக்கு எதிராக பாஜக தீவிரமாகப் பரப்புரை செய்தது. இந்த சட்டமன்ற தேர்தலில் வென்று பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. மேலும் கடந்த 1978 ஆம் ஆண்டுக்குப் பின் தற்போது வரை பொக்கிஷ அறை திறக்கப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் 46 ஆண்டுகளுக்குப் பின் இன்று (14.07.2024) பூரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறையை மீண்டும் திறக்கப்பட்டது. இதனையடுத்து பூரி மாவட்ட ஆட்சியர் உள்பட 11 பேர் கொண்ட குழுவினர் பொக்கிஷ அறைக்குச் சென்று ஆய்வு செய்தனர். அதே சமயம் பொக்கிஷ அறையில் உள்ள நகைகளை மதிப்பிடும் பணி நாளை (15.07.2024) தொடங்க உள்ளது. முன்னதாக பூரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறையில் உள்ள ஆபரணங்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருள்களைக் கணக்கீடு செய்வதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி விஷ்வநாத் ராத் தலைமையில் குழு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story

''ஏன் வேக வேகமாக அதிகாலையிலேயே என்கவுன்டர்?'' - இபிஎஸ் கேள்வி

Published on 14/07/2024 | Edited on 14/07/2024
bsp

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 05.07.2024 அன்று இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பெரம்பூர் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் அடக்கம் செய்யப்பட்டது.

இது தொடர்பாக 11 பேர் சரணடைந்த நிலையில் 11 பேரும் கைது செய்யப்பட்டு போலீஸ் கஸ்டடி காவலில் விசாரணைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி ஆகிய 11 நபர்களும் போலீசார் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தது எப்படி என்பது தொடர்பாக 11 பேரையும் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை செய்த பொழுது இன்று காலை 5 மணி அளவில் மாதாவரம் ஏரிக்கரை பின்புறம் அருகே சென்று கொண்டிருந்த பொழுது போலீஸ் காவலில் இருந்து திருவேங்கடம் (33 வயது) தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. தப்ப முன்ற திருவேங்கடத்தை போலீசார் என்கவுன்டர் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிகாலையில் நிகழ்ந்த சம்பவம் இந்த கொலை வழக்கில் மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,  ரவுடி என்கவுண்டரில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

"Why the encounter so early in the morning?"-EPS question

செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''விக்கிரவாண்டி இடைத்தேர்தலை பொருத்தவரைக்கும் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்கவில்லை. அதனால் அதிமுக போட்டியிடவில்லை. தற்பொழுது பணபலம், அதிகார பலத்தில் திமுக வென்றுள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் பொன்முடியின் சொந்த தொகுதியில் அதிமுக அதிக வாக்கு வாங்கி உள்ளது. தமிழக விவசாயிகள், தமிழக மக்களை பற்றி திமுகவிற்கு கவலை இல்லை. கூட்டணி தான் முக்கியம் என திமுக உள்ளது. விவசாயிகளுக்காக முதல்வர் கொடுக்கவில்லை'' என்றார்.

'ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருவேங்கடம் என்ற சரணடைந்த நபர் என்கவுன்டர் செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு, 'இப்பொழுது தான் தொலைக்காட்சியில் பார்த்தேன்.  ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சுட்டுக் கொல்லப்பட்ட நபர் திருவேங்கடம் என்று கருதுகிறேன். அவர் சரணடைந்திருக்கிறார் அப்படி சரணடைந்தவரை வேக வேகமாக அதிகாலையில் அழைத்துச் சென்றதாக ஊடகத்தில் பார்த்து தெரிந்து கொண்டேன். இந்த செய்தி வாயிலாக நான் அறிந்து கொண்டது ஏன் அவசர அவசரமாக அழைத்து கொண்டு செல்ல வேண்டும்.  அவர் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை கைப்பற்றுவதற்காக அழைத்துச் சென்றதாக சொல்கிறார்கள். அப்படி அழைத்துச் செல்பவர்களை கை விலங்கு இட்டு தான் அழைத்துச் செல்ல வேண்டும். ஒரு கொலை குற்றவாளியை அப்படித்தான் கைது செய்யப்பட வேண்டும் என இருப்பதாக வழக்கறிஞர்கள் சொல்கிறார்கள். அப்படி இருக்கும் பொழுது பாதுகாப்போடு சென்று இருக்க வேண்டும். அவர்கள் எங்கே அந்த ஆயுதத்தை மறைத்து வைத்திருக்கிறார்களோ அந்த ஆயுதத்தை கைப்பற்றுகின்ற பொழுது இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றதாக சொல்கிறார்கள்.  இதில் ஏதோ சந்தேகம் இருப்பதாக தெரிகிறது. கைது செய்யப்பட்டவர்கள் உண்மை குற்றவாளிகள் இல்லை என்று ஆம்ஸ்ட்ராங்கின் உறவினர்களும், அவர்களுடைய கட்சி நிர்வாகிகளும் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வேளையில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது சந்தேகத்தை கிளப்பி இருக்கிறது'' என்றார்.