ADVERTISEMENT

குட்கா லஞ்ச பரிமாற்ற வழக்கிற்கு மூடுவிழா நடத்த அதிமுக அரசு முயற்சி: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

05:09 PM Apr 24, 2018 | Anonymous (not verified)

விசாரணை அதிகாரிகளை மாற்றியும், கோப்புகளை மறைத்தும் குட்கா இலஞ்ச பரிமாற்ற வழக்கிற்கு மூடுவிழா நடத்த அதிமுக அரசு முயற்சி செய்வதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை காப்பாற்றும் நோக்கத்தில், 40 கோடி ரூபாய் இலஞ்சப் பரிமாற்றம் செய்யப்பட்ட “குட்கா” வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த மஞ்சுநாதாவை, எவ்வித காரணமுமின்றி ஓராண்டு காலத்திற்குள்ளாகவே மாறுதல் செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. குட்கா வழக்கில் சி.பி.ஐ. விசாரணை கோரி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை முடிந்து, தீர்ப்பிற்காக காத்திருக்கின்ற நேரத்தில் திடீரென்று அந்த விசாரணை அதிகாரியை மாற்றுவது, குறைந்தபட்சமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் லஞ்ச ஊழல் தடுப்புத்துறை விசாரணையையும் முடக்கி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரையும், தமிழ்நாடு காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரனையும் தப்பவைக்க மேற்கொள்ளும் அப்பட்டமான முயற்சி என்றே தெரிகிறது.

மதுரை உயர் நீதிமன்ற கிளை, சுதந்திரமான விஜிலென்ஸ் விசாரணைக்கு உத்தரவிட்டு, அந்த விசாரணையை மேற்கொள்ள விஜிலென்ஸ் ஆணையராக வி.கே.ஜெயக்கொடி ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டார். விசாரணை மேற்கொண்டிருந்த ஜெயக்கொடியை 8.1.2018 அன்று மாற்றியது அதிமுக அரசு. இப்போது அந்த விஜிலென்ஸ் ஆணையத்தின் கீழ் இயங்கும் லஞ்ச ஊழல் தடுப்புத்துறையின் கூடுதல் டி.ஜி.பி.யையும் மாற்றியுள்ளது. இதிலிருந்து, குட்கா வழக்கு தொடர்பான அனைத்து விசாரணைகளுக்கும் மூடுவிழா நடத்துகிறது அதிமுக அரசு என்பது தெளிவாகியுள்ளது.

ஏற்கனவே குட்காவில் தொடர்புடைய அதிகாரிகள், அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தலைமைச் செயலாளருக்கு வருமான வரித்துறை அனுப்பிய கோப்பையே காணவில்லை என்றார்கள். அப்படி காணாமல் போன கோப்பிற்கு காரணமான அதிகாரிகள் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதிலிருந்தே, கோப்பு காணவில்லை என்பது இட்டுக்கட்டிக் கூறப்பட்டது என்று புலப்படுகிறது. இப்போது விஜிலென்ஸ் ஆணையர், லஞ்ச ஊழல் தடுப்புப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. என்று விசாரணை அதிகாரிகளையும் மாற்றும் அதிமுக அரசின் நடவடிக்கை நிர்வாக நடைமுறைகளுக்கு மாறானது, அராஜகமானது மட்டுமல்ல, உயர்நீதிமன்ற உத்தரவுகளை மீறிய செயலாகும்.

இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் குட்கா வழக்கு விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கவேண்டும் என்று தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டது. ஏனென்றால் அதிமுக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள விஜிலென்ஸ் ஆணையமோ, லஞ்ச ஒழிப்புத் தடுப்புத்துறையோ குட்கா ஊழலில் ஈடுபட்டுள்ள அமைச்சர் மீதோ, காவல்துறை டி.ஜி.பி.க்கள் மீதோ நடவடிக்கை எடுக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். ஆகவே, உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள “குட்கா வழக்கில்” தீர்ப்பு வருவதற்குள், அதுதொடர்பான விசாரணை அதிகாரிகளை மாற்றி, குட்கா சம்பந்தப்பட்ட கோப்புகளை மறைக்கும் அதிமுக அரசும், அதற்கு துணைபோகும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், 40 கோடி குட்கா ஊழலுக்கும், மாநிலத்தில் நடைபெறும் சட்டவிரோத குட்கா விற்பனைக்கும் நிச்சயம் பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலை வரும் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அந்த சமயத்தில் இதுபோன்ற டிரான்ஸ்பர்களுக்கு துணைபோகும் உயரதிகாரிகளும் விசாரணை வளையத்திலிருந்து நிச்சயம் தப்பமுடியாது என்பதையும் எச்சரிக்கையாக விடுக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT