Skip to main content

“அதிமுக 100 நாள் கூட தாண்டாது என்றார் கலைஞர்; ஆனால்..” - முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி

Published on 18/10/2023 | Edited on 18/10/2023

 

AIADMK former minister Paranjothi spoke about DMK

 

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில், மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி, சா. அய்யம்பாளையம் எம்ஜிஆர் திடலில், மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஆதாளி தலைமையில் அதிமுக 52 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.   இக்கூட்டத்தில், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி, தலைமை கழக பேச்சாளர்கள் வடுகபட்டி பே.சுந்தரபாண்டியன், கோதை தங்கவேல் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.                

 

அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி, “திமுக கணக்கு வழக்குகளில் குளறுபடி செய்ததை தட்டி கேட்டதற்காக எம்ஜிஆர் வெளியேற்றப்பட்டார். மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆரால் அதிமுக உருவானது. எம்ஜிஆர் கட்சி தொடங்கியதும், எம்ஜிஆரின் படங்கள் வேண்டுமானால் 100 நாட்கள் ஓடும், ஆனால் இந்த கட்சி 100 நாளை தாண்டாது என மறைந்த திமுக தலைவர் கலைஞர் விமர்சித்தார். ஆனால் அதிமுக நூறு நாட்கள் அல்ல 52 வது ஆண்டு துவக்க விழாவில் காலடி வைத்துள்ளது. மறைந்த தமிழக முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் எல்லாம் முடக்கப்பட்டுள்ளன.                    

 

எடப்பாடியார் அறிவித்த திட்டங்களை எல்லாம் நீக்கிவிட்டனர். திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை, திமுகவிற்கு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாடம் புகட்டுவோம்” என பேசினார். அதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு வேஷ்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட அவைத் தலைவர் பிரின்ஸ் தங்கவேல், மாநில மகளிர் அணி துணை செயலாளர் பரமேஸ்வரி முருகன், சிறுபான்மையினர் பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான், மீனவரணி மாவட்ட செயலாளர் கண்ணதாசன், மாணவரணி மாவட்ட செயலாளர் அறிவழகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ம.க.வுடன் அ.தி.மு.க. மீண்டும் பேச்சுவார்த்தை?

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
ADMK with pmk Renegotiate
கோப்புப்படம்

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

அந்த வகையில், மக்களவைத் தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுப்பதற்காக பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் கடந்த 1 ஆம் தேதி (01.02.2024) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் பா.ம.க. கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டது. மாநில நலன் மற்றும் தேசிய நலனில் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவும், இதுகுறித்து முடிவு செய்ய பா.ம.க. நிறுவனர் ராமதாஸுக்கு அதிகாரம் வழங்கியும் பா.ம.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கடந்த 5 ஆம் தேதி (05.02.2024) திடீரென சந்தித்துப் பேசியதாகக் கூறப்பட்டது. இந்த சந்திப்பின் போது மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து இருவரும் பேசியதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. அப்போது அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் 10 மக்களவைத் தொகுதிகள் கேட்கப்பட்டதாகவும், அதற்கு ஆரணி, சிதம்பரம், கடலூர், தருமபுரி உள்ளிட்ட 6 மக்களவைத் தொகுதிகளை பாமகவுக்கு ஒதுக்கீடு செய்ய அதிமுக முன்வந்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.கவை இணைப்பது தொடர்பாக ராமதாஸ் உடன் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தைலாபுரத்தில் இன்று (24.02.2024) மாலை மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

கொ.ம.தே.க.வுக்கு தொகுதி ஒதுக்கீடு! - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
DMK Allotment of a constituency to kmdk in the alliance

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

மேலும் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க. நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது. அதன்படி தி.மு.க. சார்பில் வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் அறிக்கை உருவாக்கவும், தேர்தல் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளவும் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த குழுக்களில் தி.மு.க. மூத்த நிர்வாகிகள் இடம்பெற்றிருந்தனர்.

அந்த வகையில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் அமைச்சர் கே.என். நேரு, ஐ. பெரியசாமி, பொன்முடி, திருச்சி சிவா, ஆ. ராசா, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் இந்த குழுவினர் தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதன்படி ம.தி.மு.க., இ.யூ.மு.லீ., கொ.ம.தே.க. ஆகிய 3 கட்சிகளுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று (24.02.2024) மாலை நடைபெற்றது.

இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி கடந்த முறை கொ.ம.தே.க. போட்டியிட்ட நாமக்கல் தொகுதியில் மீண்டும் போட்டியிட உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த உடன்பாட்டில் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். கடந்த முறை நாமக்கல் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது போன்றே இந்த தேர்தலிலும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடுகிறது என கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.