AIADMK ex-ministers beaten religious preacher

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி சிஎஸ்ஐ சேகரத்தில் மத போதகராக இருப்பவர் ஜெகன். இவருக்கு 35 வயதாகிறது. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது பணி நிமித்தமாக முத்தையாபுரம் சாலையில் தனது காரில் சென்றிருக்கிறார். அப்போது அவருக்கு பின்னால், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜூ மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ மோகன் உள்ளிட்ட அதிமுக பிரமுகர்களின் கார்கள் திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டிருந்தது.

Advertisment

இதனிடையே, மத போதகர் ஜெகன் தூத்துக்குடி அருகே திருச்செந்தூர் சாலையில் உப்பாற்று ஓடை ரவுண்டானா அருகே வந்தபோது அவரது வாகனத்தை அதிமுகவினர் முந்திச் செல்ல முயன்றனர். ஆனால் முந்துவதற்கு போதுமான இடமில்லாததால் முன்னாள் அமைச்சர்களின் ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்தனர். சிறிது தூரத்தில் ஜெகனின் வாகனத்தை மடக்கி பிடித்த அதிமுகவினர், அவரை காரில் இருந்து இறங்கச் சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஏற்பட்ட தகராறில் சுமார் 15க்கும் மேற்பட்ட அதிமுகவினர் சேர்ந்து மத போதகர் ஜெகனை சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த ஜெகன், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

Advertisment

tuticorin admk issue

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மத போதகர் கூறும்போது, “முள்ளக்காடு அருகே வேகமாக வந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களின் கார்கள், எனது வாகனத்தை முந்திச் செல்ல முயன்று சென்டர் மீடியனில் ஒதுக்கி விடப் பார்த்தனர். அப்போது, நான் பிரேக் அடிக்க முயன்றபோது பின்னால் வாகனங்கள் வந்துகொண்டிருந்ததால் என்னால் தனது வாகனத்தை நிறுத்த முடியவில்லை. இந்த சூழலில், நீண்ட தூரம் தன்னை துரத்திவந்த அதிமுகவினர் உப்பாற்று ஓடை பகுதியில் வைத்து என்னை மடக்கிப் பிடித்தனர்.

அப்போது, அந்த காரில் இருந்த முன்னாள் அமைச்சர்கள், ‘எங்கள் வாகனத்தை முந்த பார்க்கிறாயா’ என்று கூறி ஆதரவாளர்களை தன்னை தாக்குமாறு தெரிவித்தனர். அப்போது, அவர்களுடைய ஆதரவாளர்கள் 15க்கும் மேற்பட்டோர் சேர்ந்துகொண்டு தன்னை சரமாரியாக தாக்கினர். மேலும், நான் அவசரமாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளதாகக் கூறினேன். ஆனாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் வாகனத்தின் சாவியை பிடுங்கி கீழே எறிந்து விட்டதாக" மத போதகர் ஜெகன் தெரிவித்தார்.

Advertisment

tuticorin admk issue

பின்னர், இச்சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, கடம்பூர் ராஜூ மற்றும் நேரில் பார்த்தால் அடையாளம் காட்டக்கூடிய 15 பேர் மீது ஆய்வாளர் செந்தில்குமார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த சம்பவத்தை அறிந்த அமைச்சர் கீதா ஜீவன், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மத போதகரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். சி.எஸ்.ஐ. மத போதகர் ஒருவர் அதிமுகவினரால் தாக்கப்பட்ட சம்பவம், தூத்துக்குடி -நாசரேத் திருமண்டல நிர்வாகிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.