'AIADMK election manifesto is a reflection of needs'- EPS released the video

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி தொகுதிப் பங்கீட்டை முடித்த கையோடு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதோடு தேர்தல் அறிக்கையும் வெளியிட்டது. அதிமுக தேர்தல் அறிக்கையில் சிறப்பு அம்சங்களாக ஆளுநர் பதவி நியமனத்திற்கு கருத்து கேட்க வேண்டும்; நீட் தேர்வுக்கு மாற்றாக மாற்றுத் தேர்வு முறை கொண்டு கொண்டு வரப்படும்; பெண்களுக்கு மாதம் 3000 ரூபாய் உரிமை தொகை; சென்னையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தை நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்; முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்; புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்; சமையல் எரிவாயு விலை கட்டுப்படுத்தப்படும்; சீம கருவேல மரங்கள் அகற்றும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்; தமிழகத்தில் புதிய நகரங்களில் மெட்ரோ திட்டங்கள் கொண்டுவரப்படும் என்பவை இடம்பெற்றுள்ளது.

இதில் மகளிர் உரிமைத் தொகை 3000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு திமுகவை பின் தொடர்ந்து கொடுக்கப்பட்ட அறிவிப்பா? என எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், 'இதில் கொடுத்துள்ள அனைத்து வாக்குறுதிகளும் மத்திய அரசிடம் மாநில அரசு வலியுறுத்தி பெற இருப்பது. மத்திய அரசும் மாதம் தோறும் மகளிருக்கு உரிமை தொகை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துவோம்' எனத் தெரிவித்தார்.

Advertisment

NN

திமுகவின் தேர்தல் அறிக்கையை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து அதிமுக கொடுத்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனத்தை வைத்திருந்தார். இந்நிலையில் எக்ஸ் வலைதளத்தில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், 'அன்பார்ந்த தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்களே! உங்கள் எண்ணங்களின், தேவைகளின் பிரதிபலிப்பே அஇஅதிமுக தேர்தல்அறிக்கை. வெற்று பிம்பங்களோ, விளம்பர நோக்கமோ இன்றி, நடைமுறைக்கு சாத்தியமான வாக்குறுதிகள் கொண்ட உண்மை அறிக்கையை அளித்த பெருமிதத்துடன் இன்று திருச்சியில் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் உங்களையெல்லாம் சந்திக்க வருகிறேன். நம் மாநிலத்திற்கு எதிரான சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளையும், மாநில உரிமைப் பறிப்புகளையும், போதைப்பொருள் புழக்கத்தையும், பிரிவினைவாத எண்ணங்களையும் ஒற்றைவிரலால் ஓங்கிஅடிப்போம்' என தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

Advertisment