
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் பாரதிய ஜனதாவுக்கு 20 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியுள்ளது. அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்த நிலையில், நேற்று (05.03.2021) தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. முன்னதாக அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கியுள்ளதாக அதிமுக தெரிவித்துள்ளது. இந்நிலையில் துணைமுதல்வர் ஓபிஎஸ், பாஜகவிற்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதேபோல் அதிமுக - தமாகா கூட்டணியில் தமாகாவிற்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பட்டுக்கோட்டை, ஈரோடு மேற்கு, வால்பாறை ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சைக்கிள் சின்னத்தில் போட்டியிட 12 தொகுதிகள் வேண்டும் என அதிமுகவிடம் தமாகா கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று (06 மார்ச்) காலை 10 மணிக்கு ஓபிஎஸ் - இபிஎஸ் தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடக்கவுள்ளது. நேற்று முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், தேர்தல் அறிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.