Advertisment

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக - திமுக கடும் மோதல்!

AIADMK-DMK Clash  Trichy Corporation Meeting

Advertisment

சாலை போடும் விவகாரத்தில் திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்களுக்கும், திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம், மோதல் ஏற்பட்டது. அப்போது மாமன்ற மரபை திமுக மீறிவிட்டதாகக்கூறி அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாநகராட்சி சாதாரண கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் இன்று நடந்தது. கமிஷனர் வைத்திநாதன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 60 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.பின்னர் கவுன்சிலர்கள் தங்கள் வார்டு மக்களின் பிரச்சனைகள், கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். கூட்டம் தொடங்கியதும் மேயர் அன்பழகன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனைத்து கவுன்சிலர்களும் மேஜையை தட்டி பிறந்தநாள் வாழ்த்துகளைத்தெரிவித்தனர்.

கவிதா செல்வம் திமுக:எனது 58வது வார்டுக்குட்பட்ட பகுதியில் இருக்கும் அன்பு நகர் ரயில்வே பாலத்தில் நீர் சுரக்கும் காரணத்தால் அந்த பகுதியை கடந்து செல்லும் அன்பு நகர், சிம்கோ காலனி மக்கள் அவதிக்குள்ளாகிறார்கள். அவ்வப்போது அந்த நீரை மோட்டார் வைத்து வெளியேற்றிய போதிலும் நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை.

ஆணையர் வைத்திநாதன்:ரயில்வே பாலத்தில் மாநகராட்சி பொது நிதியை பயன்படுத்தினால் ஆட்சேபனை வரும். இப்போது ரயில்வேயிடம் நாம் தடையில்லா சான்று பெற்றிருக்கின்றோம். இனிமேல் விரைந்து பணிகளை மேற்கொண்டு நீர் கசிவது தடுத்து நிறுத்தப்படும்.

Advertisment

சுரேஷ் (சி.பி.எம்):எனது வார்டுக்குட்பட்ட செந்தண்ணீர்புரம் பகுதியில் 1600-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு நிலத்தடி நீர் மிகவும் மாசுபட்டுள்ளது. மாநகராட்சி அனுமதித்த நிறுவனங்களால் இந்த நிலை ஏற்பட்டது. தற்போது அந்த நிறுவனங்கள் இல்லாத நிலையிலும் மாசுபட்ட நீரை மாற்றுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவிரி நீரை மட்டுமே நம்பி இருக்கும் இந்த மக்களுக்கு கடந்த பட்ஜெட்டில் ஒரு மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டப்படும் என அறிவித்தீர்கள். ஆனால், இப்போது வாய்ப்பு இல்லை எனக் கடிதம் வந்துள்ளது. இது எந்த விதத்தில் நியாயம்?

மேயர் அன்பழகன்:நீங்கள் இந்த தகவலை எனக்கு சொன்ன உடனேயே செயல் பொறியாளரை அழைத்து அந்த பகுதி மக்களுக்கு தேவையான அளவில் 7 லட்சம் லிட்டர் கொள்ளளவில் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளேன்.

கோ.கு.அம்பிகாபதி (மாநகராட்சி அதிமுக தலைவர்):கோடைக்காலம் வந்துவிட்டது. எனது வார்டில் குடிநீர் பிரச்சினை ஏற்படும் வாய்ப்புள்ளது. திருச்சி மாநகராட்சியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட 400 கிலோமீட்டர் சாலையில் 300 கிலோமீட்டர் சாலை போடப்பட்டதாக தாங்கள் சொல்லி இருக்கிறீர்கள். ஆனால், எனது வார்டில் சாலைகள், பாதாள சாக்கடை பணிகள் நிறைவுற்று இருக்கிறது. இதில் இதுவரை நான்கு சாலைகள் கூட தார் போடவில்லை. அப்படி என்றால் 300 கிலோமீட்டர் சாலையும் மேற்கு தொகுதியில் தான் போட்டிருக்கிறீர்களா?

இவ்வாறு அவர் பேசவும் முத்துச்செல்வம், கமால் முஸ்தபா, புஷ்பராஜ், நாகராஜ் உள்ளிட்ட திமுக கவுன்சிலர்கள் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுடன் கோட்டத் தலைவர்கள் துர்காதேவி, விஜயலட்சுமி கண்ணன் உள்ளிட்டவர்களும் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் கடும் கூச்சல், அமளி நிலவியது. அப்போது திருச்சி மாநகராட்சி அ.தி.மு.க தலைவர் கோ.கு.அம்பிகாபதிக்கு ஆதரவாக அதிமுக கவுன்சிலர்கள் அரவிந்தன், அனுசுயா ஆகியோரும் சேர்ந்து கொண்டனர். பின்னர் அனைவரும் வெளிநடப்பு செய்வதாகக் கூறி வெளியே சென்றனர்.

இதையடுத்து கோ.கு.அம்பிகாபதி நிருபர்களிடம் கூறும்போது, “அதிமுக கவுன்சிலர்களின் வார்டுகளை திருச்சி மாநகராட்சி நிர்வாகம் புறக்கணிக்கிறது. திருச்சி மேற்கு தொகுதியில் போடப்படும் சாலைகளைதிரும்பத் திரும்பப் போடுகிறார்கள். அதைக் கேட்டால் உங்களுக்கு பேச அருகதை இல்லை என்று திமுக கவுன்சிலர்கள் கூச்சல் எழுப்புகிறார்கள். ஆகவே தான் வெளிநடப்பு செய்துள்ளோம்” என்றார். இதே கருத்தை வலியுறுத்தி கவுன்சிலர்கள் அரவிந்தன்,அனுசியா ஆகியோரும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்புக்குப் பின் விவாதம் தொடர்ந்து நடந்தது.

முத்துக்குமார் (திமுக):திருச்சி டாக்கர் சாலையில் உள்ள மீன் மார்க்கெட்டால் தான் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆகவே அந்த மீன் மார்க்கெட்டை அகற்ற வேண்டும்.

மேயர் அன்பழகன்:- அந்த மார்க்கெட்டை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

பிரபாகரன் (வி..சி.க.):திருச்சி இ.பி. ரோடு பகுதியில் உள்ள முருகன் தியேட்டரை இடித்துவிட்டு மாநகராட்சிக்கு வருவாய் ஈட்டும் வகையில் வணிக வளாகம் அல்லது திருமண மண்டபம் கட்டவேண்டும். திருச்சி அரிஸ்டோ கார்னர் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலையை முழுவதுமாக இரும்பு கூண்டுகளால் மூடி வைத்துள்ளனர். தலைவரின் முகம் தெரியும் அளவுக்கு அதனை திறந்து மூட வழிவகை செய்ய வேண்டும்.

மேயர் அன்பழகன்:உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அப்பீஸ் முத்துக்குமார் (மதிமுக):திருவானைக்காவல் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலைச் சுற்றி கழிப்பிட வசதிகள் இல்லை. இதனால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். எனவே, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கோவிலைச் சுற்றி கழிப்பிடங்கள் அமைக்க வேண்டும்.

நாகராஜ் (திமுக):தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத்தெரிவித்துக் கொள்கிறேன். எனது வார்டில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு டெண்டர் விட்டும் வேலைகள் தொடங்கவில்லை. எனவே, வேறு டெண்டர் விட்டு பணியைத்தொடங்க வேண்டும்.

மேயர் அன்பழகன் :-உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

எல்.ஐ.சி.சங்கர் (தேமுதிக):திருச்சி கிழக்கு தாலுகா அலுவலகம் புதுக்கோட்டை சாலையில் கொட்டப்பட்டு பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் மக்கள் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். எனவே, மாநகருக்குள் கிழக்கு தாலுகா அலுவலகத்தை மாற்ற வேண்டும். திருச்சி பாலக்கரை ரவுண்டானாவில் உள்ள சிவாஜி சிலையைத்திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜவகர் (காங்கிரஸ்):திருவரங்கம் பகுதியில் நடந்து வரும் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். திருவரங்கம் பஸ் நிலையத்தையும் உடனடியாக கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவரங்கத்தில் தைத் தேரோடும் சாலையில் கான்கிரீட் சாலை அமைக்க வேண்டும். உத்திரவீதியில் இரண்டு கழிப்பிடங்களைக் கட்ட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இக்கூட்டத்தில் மண்டல குழு தலைவர்கள் மதிவாணன், விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி, ஆண்டாள் ராம்குமார்மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

admk trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe