Skip to main content

அதிமுக கூட்டணி மொத்தமாக காலியாகி விட்டது..! - கொ.ம.தே.க.ஈஸ்வரன்

Published on 26/05/2019 | Edited on 26/05/2019

ஈரோட்டில் கொமதேக மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன் இன்று செய்தியாளர்களிடம் பேசும் போது,

 


"கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய, கொமதேக கடுமையாக பாடுபட்டுள்ளது. தமிழக மக்கள் ஒரு தெளிவான தீர்ப்பைக் கொடுத்துள்ளார்கள். நாமக்கல்லில் கொமதேக அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நாடு முழுவதும் பாஜக வெற்றி பெற்ற நிலையில், தமிழகத்தில் மட்டும் வெற்றி பெறவில்லை என்றால், தமிழக மக்கள் தமிழக அரசிற்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கிறார்கள் என்று அர்த்தம். 

 

eswaran

 

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போடப்பட்ட வாக்குகள் மத்திய அரசுக்கு எதிரானது மட்டுமல்ல, மாநில அரசுக்கும் எதிரானதாக இருந்துள்ளது. அதனால்தான், அதிமுக - பாஜக கூட்டணி மோசமான தோல்வியைச் சந்தித்து இருக்கிறது. இந்த நிலைமை ஏற்பட்டதற்கான காரணம் மத்திய, மாநில அரசுகளுக்குத் தெரியும். வளர்ச்சித் திட்டங்கள் சரியாக முன்னெடுக்கப்படவில்லை. அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. மாநில அரசு, மத்திய அரசிடம் உரிமைகளோடு கேட்டுப் பெறுவதற்கான, தகுதியை இழந்து இருந்தார்கள். அதிமுக 37 எம்பிக்களை வைத்திருந்தும் கூட, மத்திய அரசிடம் இருந்து பெற வேண்டிய நிதியைக் கூட, மாநில அரசு பெற முடியாமல இருந்தார்கள்.
 

 

மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி மாநில அரசு கவலைப்படாமல் இருந்தது. அதுதான் இந்த தேர்தலில் அந்த கூட்டணி மோசமான தோல்வியைச் சந்திக்க முக்கிய காரணம். அதற்கு மேல் இந்த தேர்தல் மிகப்பெரிய படிப்பினையை தமிழக அரசியல் கட்சிகளுக்கு கொடுத்துள்ளது. எந்த அரசியல் கட்சித் தலைவராக இருந்தாலும், அரசியலை நாகரிகமாகச் செய்ய வேண்டும்  என்று மக்கள் கற்றுக் கொடுத்து இருக்கிறார்கள். 

 

 


தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களைப் பற்றி அன்புமணி ராமதாஸ் எவ்வளவு கொச்சையாகப் பேசினார்கள் என்பதை அனைவரும் அறிவார்கள். அதையெல்லாம் தமிழக ஆட்சியாளர்கள் ஒரு பொருட்டாக கருதாமல், அவர்களுடன் கூட்டணி அமைத்தனர். வாக்கு வங்கியை வைத்து ஒரு கணக்கு போட்டு இந்த கூட்டணியை அமைத்து இருக்கலாம். ஆனால், மக்கள் நாகரீகமாக சிந்திக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 

 

 

கடந்த காலங்களில் பாமக - அதிமுக வடமாவட்டங்களில் கூட்டணி அமைத்து போட்டியிட்டால், பக்கத்தில் கூட திமுக நெருங்க முடியாது. ஆனால், அதிமுக, பாமகவினரே இம்முறை முரண்பட்ட கூட்டணி என்பதை புரிந்து கொண்டு எங்கள் கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர். முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் தைலாபுரம் சென்று விருந்து சாப்பிடலாம். உடனே பழையவற்றை மக்கள் மறந்து விடுவார்கள் என்று நினைப்பது தவறு. 

 

 AIADMK coalition is totally empty -  kmdk Eswaran


 

பல தலைவர்களுக்கு இந்த தேர்தலில் மக்கள் பாடம் புகட்டி இருக்கின்றனர். இனியாவது தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், அநாகரீகரிகமாக மற்றவர்களைப் பற்றி பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், தேர்தல் நேரத்தில் மக்கள் தண்டனை கொடுப்பார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 

 


கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழக எம்பிக்கள் என்ன செய்தார்கள் என்பதை ஒப்பிட்டுப் பார்த்து, இப்போது எம்பிக்களை விமர்சிக்கின்றனர். அதிமுகவின் 37 எம்பிக்கள் இருந்தும் எவ்வித பிரயோஜனமும் கிடையாது. ஆனால், அவர்களோடு இன்று வெற்றி பெற்றவர்களை ஒப்பிடக் கூடாது. அவர்கள் பாராளுமன்றத்தில் ஒரு வார்த்தை பேச வேண்டுமென்றால், அவர்கள் அனுமதி பெற்றுத்தான் பேச வேண்டும். ஏற்கனவே எம்பிக்களாக இருந்த 37 பேரில், ஆறு பேருக்கு மட்டும்தான் அதிமுக திரும்ப வாய்ப்பு கொடுத்துள்ளது. மீதமுள்ள 31 பேர் தகுதியில்லாதவர்கள் என்று அவர்களே முடிவு செய்து இருக்கிறார்கள். 

 

 

 

அதிமுகவோடு கூட்டணி அமைக்க பாஜக, எவ்வளவு அதிகாரத்தோடு பயணித்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். பல ஊழல் வழக்குகளில் அதிமுகவின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் இன்று சிக்கியுள்ளனர். அந்த கோப்புகளை மத்திய அரசு வைத்துக் கொண்டு மிரட்டும்போது, இவர்கள் 37 எம்பிக்கள் இருந்தும் என்ன செய்ய முடியும்? பிரதமரைச் சந்திக்கக் கூட இவர்களால் நேரம் பெறமுடியவில்லை. தமிழகத்தில் இருந்து டெல்லிக்கு சென்று போராடிய விவசாயிகள் பிரதமரைச் சந்திக்க வைக்கக் கூட ஏற்பாடு செய்ய முடியவில்லை. ஆனால், இன்றைக்கு வென்றுள்ள எம்பிக்கள் 37 பேரும் திறமைசாலிகள், அனுபவசாலிகள், தைரியமானவர்கள். 

 

 

தமிழக உரிமைகளுக்காக உரக்கக் குரல் கொடுக்கக் கூடியவர்கள். எனவே, கடந்த ஐந்து ஆண்டு நடப்புகளை வைத்து இப்போது ஒப்பிட வேண்டிய அவசியம் கிடையாது. மத்திய அரசிடம் இருந்து தேவையான திட்டங்களைப் பெற்று நாங்கள் சாதித்துக் காட்டுவோம். தேர்தலின்போது பணப்பட்டுவாடா என்பது புதுச்செய்தியாக யாரும் பார்ப்பதில்லை. தேனி தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றதில் சந்தேகம் இருக்கிறது. சம்மந்தமில்லாமல், கோவையில் இருந்து தேனிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டுள்ளது. எதற்காக அவை அனுப்பபட்டது என்றே கோவை ஆட்சியருக்குத் தெரியவில்லை. தேர்தல் நடந்து 4 நாட்களுக்குப் பிறகு ஒரு வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடந்தது. எதற்காக அதிக வாக்கு இயந்திரங்களை தேனிக்கு அனுப்பினார்கள் என்பது மர்மமாக இருக்கிறது. 

 

 

தேனி தொகுதி வெற்றி குறித்து ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்தேகத்திருப்பதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. நாங்கள் கேள்விப்பட்டவரை, தமிழகத்திலேயே தேனியில் தான் அதிமுக, அளவுக்கு அதிக பணம் கொடுத்தார்கள் என்று செய்திகள் வருகிறது. டிடிவி தினகரன் எந்த ஸ்லீப்பர் செல் சொல்கிறார் என்று தெரியவில்லை. ஆனால், தற்போதைய எம்.எல்.ஏ.க்களில் சிலர் அரசுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் ஸ்லீப்பர் செல்களாக எனத் தெரியாது. நம்பிக்கையில்லாத் தீர்மானம் வரும்போது அரசுக்கு கொஞ்சம் சங்கடமான நிலைதான் ஏற்படும்.

 

 

கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் நல்ல திட்டம். அதனை நிறைவேற்றுவதாகச் சொன்னதை வரவேற்கிறோம். ஆனால், 2014ல் பிரதமர் கங்கை -காவிரி இணைப்பு திட்டத்தை அறிவித்து, கிடப்பில் போட்டதைப் போல் இதனைப் போட்டுவிடக்கூடாது. கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தைத் தொடங்குவதற்கு மத்திய அமைச்சர்  நிதின் கட்கரியிடத்தில் எவ்வளவு அழுத்தம் கொடுக்க முடியுமோ, அவ்வளவு அழுத்தம் கொடுத்து, திட்டத்தை தொடங்க வைப்போம். கொங்கு மண்டலத்தில் அதிமுக வலுவிழந்து விட்டது என்பதை தேர்தல் முடிவு நிருபித்துள்ளது. இந்த முடிவு எதிர்பார்த்ததுதான். ஆனால், அவர்கள் நம்ப மறுத்து விட்டனர். 

 

 

ஒன்றரைக் கோடி உறுப்பினர்களைக் கொண்ட கட்சி, கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்து ஒரு கோடி வாக்குக்களைத்தான் பெற்றுள்ளது. தமிழகத்தில் மோடி எதிர்ப்பலையுடன், அரசுக்கு எதிரான அலையும் சேர்ந்ததால் மொத்தமாக கூட்டணி காலியாகி விட்டது. பாமக, கடைசிநேரம் வரை பேரம் பேசிய தேமுதிக  போன்ற கட்சிகள் மிகப்பெரிய தோல்விக்கு அடித்தளம் அமைத்து விட்டன. உள்ளாட்சித் தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும். நீதிமன்றம் உரிய அழுத்தம் கொடுத்து தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும். மக்கள் நலன் கருதி உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.