Skip to main content

விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை; விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படுகிறாரா அதிமுக வேட்பாளர்?

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
AIADMK candidates nominated by Vijayabaskar may also be questioned

மாஜி அமைச்சர் விராலிமலை விஜயபாஸ்கரின் இலுப்பூர் வீட்டில் இன்று காலை முதல் மதுரை, சென்னை ஆகிய ஊர்களில் இருந்து 3 கார்களில் வந்துள்ள ஒரு பெண் அதிகாரி உள்பட 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வீட்டில் விஜயபாஸ்கரின் அப்பா மற்றும் அம்மா மட்டுமே இருப்பதால் இலுப்பூரை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து குவிந்துள்ள அதிமுகவினர் வீட்டின் முன்னால் நிற்கின்றனர்.

பாஜகவின் அராஜக போக்கால் இப்படி நடப்பதாக கூறும் அவரது ஆதரவாளர்கள், தேர்தலில் பதில் சொல்வோம் என்றும் கூறி வருகின்றனர். மாலை வரை சோதனை தொடரும் என்ற நிலையில் ஒரு காரில் சிலர் வெளியில் சென்றுள்ளனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் வெளியில் சென்ற அமலாக்கத்துறையினரின் கார் எங்கே சென்றுள்ளது என்று தேடி வருகின்றனர்.

மேலும் ஏற்கனவே ரைடுகளில் சிக்கி வெளியில் உள்ள கறம்பக்குடி குளந்திரான்பட்டு மணல் மாஃபியா கரிகாலனின் சகோதரர் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மா.செ கருப்பையாவுடன் நெருக்கமாக உள்ள மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் அவருக்கு அரசு ஒப்பந்தங்களையும் பெற்றுக் கொடுத்திருந்தார் என்பதும் இப்போது அதிகாரிகளுக்குத் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், திருச்சி நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளர் தங்கமணியை ஓரம்கட்டிவிட்டு எடப்பாடியிடம் கடுமையாக மல்லுக்கட்டி பாசறை கருப்பையாவுக்கு சீட்டு வாங்கிக் கொடுத்துள்ளார். இதேபோல மேலும் சிலருக்கு சீட்டு கிடைக்க பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனால் விஜயபாஸ்கரிடம் தொடர்பில் உள்ள திருச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் பாசறை கருப்பையா மற்றும் அவரது தம்பி கரிகாலன் வீடு, மேலும் சில வேட்பாளர்கள் வீடுகளுக்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள் செல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மேலிருந்து சிக்னல் கிடைத்தால் ரைடு நிச்சயம் என்கின்றனர் துறை சார்ந்தவர்களே.

சார்ந்த செய்திகள்

 

Next Story

தேர்தல் முடிவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் வழக்கு!

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
Opposing the election result. Case in Panneerselvam High Court

ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாஜக தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது.

இருப்பினும் தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி மொத்தம் உள்ள 39 இடங்களையும் வென்றது. புதுச்சேரியின் ஒரு தொகுதியில் காங்கிரஸ் கட்சி வென்றுள்ளது. அதே சமயம் தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், சட்டமன்ற உறுப்பினருமான ஓ. பன்னீர்செல்வம் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பாக ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இந்நிலையில் ராமநாதபுரம் நாடாளுமன்ற மக்களவை தொகுதியின் தேர்தல் முடிவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “தமிழ்நாடு முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் பிரிந்து கிடக்கும் அதிமுக இணைய வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதனை நானும் வலியுறுத்திக் கொண்டிருக்கிறேன்.

அதிமுக பிளவுபட்டு உள்ளது தமிழகத்தில் உள்ள ஜனநாயக சக்திகளுக்கு எதிரானது. அதிமுகவில் எங்களை இணைத்துக் கொள்ளுங்கள் என்று எடப்பாடி பழனிசாமியிடம் யார் சொன்னது. அவராகவே கேள்விக் கேட்டுக் கொண்டு, அவராகவே பதில் சொல்வது நல்லதல்ல. சசிகலா பயணம் வெற்றி பெற வாழ்த்துகள்.” எனத் தெரிவித்தார். ராமநாதபுரம் தொகுதியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி 5 லட்சத்து 9 ஆயிரத்து 664 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது. 

Next Story

‘மேலும் ஒரு வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது’ - போலீசார் அதிரடி!

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
In another case MR. Vijayabaskar Arrested Police Action

கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்து உள்ளனர் என்று கூறியிருந்தார்.  மேலும் இது தொடர்பாக மேலக்கரூர் பொறுப்பு சார்பதிவாளரும் கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

அதே சமயம் இந்த வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்று கருதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து நில அபகரிப்பு வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன் ஜாமீன் மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து முன்ஜாமீன் கோரி எம்.ஆர். விஜயபாஸ்கர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இத்தகைய சூழலில் தலைமறைவாக கேரளாவில் பதுங்கி இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு வரும் 31ஆம் தேதி வரை என 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே பிரகாஷ் வாங்கல் காவல் நிலையத்தில் ஏற்கனவே  எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட 13 பேர்  மீது அளித்த புகாரின் பேரில் கொலை முயற்சி, ஆள் கடத்தல் உள்ளிட்ட 7 சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தப் புகாரின் பேரில் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து எம்.ஆர். விஜயபாஸ்கரிடம் இத்தகவலை தெரிவிப்பதற்காக நீதிமன்றத்தில் வாங்கல் காவல் துறையினர் பெற உள்ளனர்.