
சின்னமனூர் வேளாண்மை மையத்தில் விலைக்கு வாங்கிய கடலைப் பருப்பு முளைக்கவில்லை என, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பாக கடலைப் பருப்பைக் கீழே கொட்டி விவசாயி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூர் ஊராட்சி ஒன்றியம் பொட்டிபுரம் அருகே ராமகிருஷ்ணா பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி காளிதாசன்.
இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி சின்னமனூரில் உள்ள வேளாண்மை மையத்தில் 36 கிலோ கொண்ட 4 விதை கடலைப் பருப்பு மூடைகளை வாங்கி உள்ளார். மூடைகளைப் பக்குவமாக உடைத்ததில் 50 கிலோ விதை கடலைப் பருப்பு கிடைத்தது. அதில் சாகுபடி செய்ததில் 20 கிலோ கடலைப் பருப்பு மட்டுமே முளைத்துள்ளது. மீதி 30 கிலோ பருப்பு, பதரானதால் விவசாயம் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறி தேனி மாவட்ட ஆட்சியர் நுழைவாயில் முன்பாக பதர் விதை கடலைப் பருப்பைத் தரையில் கொட்டி ஆர்ப்பாட்டம் செய்தார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், “நான் ஒரு விவசாயி, கடலை சாகுபடி செய்வதற்காக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் தேதி சின்னமனூர் வேளாண்மை மையத்தில் 144 கிலோ விதை கடலையை வாங்கி அதனைப் பக்குவமாக கையில் உடைத்தில் 50 கிலோ விதை கடலைப்பருப்பு கிடைத்தது. அதில் 20 கிலோ கடலைப்பருப்பு மட்டுமே முளைத்துள்ளது, மீதமுள்ள 30 கிலோ கடலைப்பருப்பு பதராக உள்ளது.
இது சம்பந்தமாக வேளாண்மை மையத்தில் கேட்டால், பதரான கடலைப் பருப்பை எண்ணெய் ஆட்டி எடுத்துக்கொள் என்று பொறுப்பில்லாமல் கூறுகின்றனர். இதனால் மன வேதனையுடன் தேனி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு கொடுக்க வந்தேன்.” என்றார். மேலும் வேளாண்மை துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார்.