Skip to main content

“விவசாய சங்கங்கள் தூங்கிக் கொண்டிருக்கின்றனவா...” - அன்புமணி ஆவேசம்  

Published on 29/07/2023 | Edited on 29/07/2023

 

"Agricultural unions are sleeping..? - Anbumani
கோப்புப் படம்

 

என்.எல்.சி. நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டம் மேல்வளையமாதேவி கிராமத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் விளைநிலங்களில் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு கால்வாய் வெட்டும் பணி கடந்த இரு நாட்களாக நடைபெற்றது. இந்நிலையில், பாமக சார்பில் என்.எல்.சி நிர்வாகம் தரப்பில் விளைநிலங்கள் கையகப்படுத்துவதைக் கண்டித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நெய்வேலி ஆர்ச்கேட் பகுதியில் உள்ள என்.எல்.சி. நிறுவனத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடைபெற்றது.

 

இந்தப் போராட்டத்தின்போது பாமகவினர் நடத்திய கல்வீச்சு சம்பவத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் 8 பேரும், செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த 6 செய்தியாளர்களும் காயமடைந்தனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பாமகவினர் குண்டுக்கட்டாகக் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் கடலூரில் ஒரு தனியார் மண்டபத்தில் சிறை வைக்கப்பட்ட நிலையில், அன்புமணி கைதைக் கண்டித்துப் பல இடங்களில் பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து நேற்று அன்புமணி ராமதாஸ் உட்படக் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

 

இந்த நிலையில், இன்று  செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், “விவசாயிகளை என்னுடைய கடவுளாக தான் பார்க்கிறேன். விவசாயிகள் இல்லாமல் நாம் யாரும் கிடையாது. நாளைக்கு சோற்றுக்கு என்ன பண்ணப் போகிறோம். இன்னும் 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உணவுப் பற்றாக்குறை வரப்போகிறது என்று ஐ.நா. சபை தெளிவாக கூறியிருக்கிறது. அப்படி இருக்கையில் இருக்கின்ற நிலத்தை எல்லாம் அழித்து விட்டால் நாளைக்கு என்ன செய்யப் போகிறோம். அதுமட்டுமல்லாமல், என்.எல்.சி நிறுவனம் தமிழ்நாட்டுக்குத் தேவையில்லை. என்.எல்.சி.யின் பயன்பாடு முடிந்து விட்டது. அந்த காலத்தில் மின்சாரம் தேவைப்பட்டதால் என்.எல்.சி தேவைப்பட்டது. ஆனால், இன்றைக்கு தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறிவிட்டது என்று நான் கூறவில்லை. இதற்கு முன் இருந்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிதான் கூறினார்.

 

தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறிவிட்டது. அதனால், தமிழ்நாட்டில் இருக்கும் மின்சாரத்தை எல்லாம் வெளி மாநிலத்திற்கு விற்றுக் கொண்டிருக்கிறோம் என்று இதற்கு முன் இருந்த அமைச்சர்கள் கூட இதைத்தான் சொன்னார்கள். அதனால், வெளிமாநிலத்திற்கு மின்சாரத்தை விற்கக் கூடிய நிலைமையில் நீங்கள் இருக்கிறீர்கள் என்று சொன்னால் உங்களுக்கு எதற்கு நிலம்? விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்தி என்.எல்.சி. நிறுவனத்திற்கு ஏன் கொடுக்க வேண்டும்?

 

அந்த நிறுவனம் இருக்கின்ற நிலத்தை எல்லாம் அழித்து அந்த இடத்தின் சுற்றுச்சூழலை மாசுபடுத்திவிட்டது. இதனால் அங்கு இருக்கக்கூடிய நிலத்தடி நீரை இல்லாமல் ஆக்கிவிட்டார்கள். கோடிக்கணக்கான லிட்டர் நிலத்தடி நீரை எடுத்து கடலுக்கு அனுப்புவது இந்த உலகத்தில் எங்காவது நடந்திருக்கிறதா. இதுபோன்ற முட்டாள்தனம் எங்காவது நடக்குமா? ஆனால், தமிழ்நாட்டில் என்.எல்.சி.யில் நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு தமிழக அரசு உடந்தையாக இருக்கிறது. அதே என்.எல்.சி நிறுவனத்திலிருந்து 50 கி.மீ வடக்கில் சென்று பார்த்தால் கடலில் இருந்து நீரை எடுத்து குடிநீராக மாற்றும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால், என்.எல்.சி.யில் குடிநீரை கடலுக்கு அனுப்பும் திட்டம் நடக்கிறது. இதைவிட முட்டாள்தனம் எங்காவது நடக்குமா?

 

விவசாய சங்கங்கள் எல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். எங்கே தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள். இது என்ன என்.எல்.சி பிரச்சனையா? இது உங்களுடைய பிரச்சனை. இது நம்முடைய பிரச்சனை. அதனால், இதைத் தொடர்ந்து செய்தால் இதை விடக் கடுமையான விளைவுகளை தமிழக அரசு சந்திக்கக் கூடும். இதை உடனடியாக நிறுத்திக் கொள்ளுங்கள். இதை நான் கடுமையாக எச்சரிக்கிறேன்”  என்று கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்