Skip to main content

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் மறைவு; முதல்வர் நேரில் அஞ்சலி

Published on 29/09/2023 | Edited on 29/09/2023

 

Agricultural Scientist MS Swaminathan CM mk stalin

 

பசுமைப் புரட்சியின் தந்தை என அறியப்பட்டவரும், வேளாண் விஞ்ஞானியுமான எம்.எஸ். சுவாமிநாதன் (வயது 98) வயது மூப்பு காரணமாகச் சென்னையில் நேற்று காலை 11.20க்கு காலமானார். இவர் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம், சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சர்வதேச இயற்கை வள பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி உயர் பதவிகளை வகித்தது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவுக்குப் பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

 

அந்த வகையில் இவரது மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் வெளியிட்டிருந்த இரங்கல் செய்திக் குறிப்பில், “பசிப்பிணி ஒழிப்பு - உணவுப் பாதுகாப்பு என்ற இரு குறிக்கோள்களுக்காகக் கடந்த முக்கால் நூற்றாண்டு காலம் அரும்பணி ஆற்றி வந்த தலைசிறந்த வேளாண் அறிவியலாளர் எம்.எஸ். சுவாமிநாதன் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்” எனத் தெரிவித்திருந்தார். மேலும் உலகம் போற்றும் விஞ்ஞானியாக சுற்றுச்சூழல் வேளாண்மைத்துறையில் அளப்பரிய பங்காற்றிய வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார்.

 

இந்நிலையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின், எம்.எஸ். சுவாமிநாதன் உடலுக்கு தமிழக அரசின் சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது அமைச்சர் முத்துசாமியும் உடன் இருந்தார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பதிவில், “கலைஞருக்குப் புகழ் மாலை சூட்டிய, வேளாண் அறிவியலாளர் எம்.எஸ். சுவாமிநாதனுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மலரஞ்சலி செலுத்தினேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்