Aged couple made struggle at viluppuram collector office

விழுப்புரம் மாவட்டம், அவலூர்பேட்டை அருகிலுள்ள தேப்பிராம் பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராசு(65), அவரது மனைவி ராஜி(58). இவர்கள் இருவரும் நேற்று திங்கள்கிழமை காலை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். திங்கள் கிழமை என்பதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மோகன் பொதுமக்களிடம் குறைகேட்பு கூட்டம் நடத்தி மனுக்கள் பெற்று கொண்டிருந்தார்.

Advertisment

அப்போது ராசு மற்றும் ராஜி இருவரும் திடீரென தங்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் ஓடிச்சென்று அவர்களை தடுத்து நிறுத்தி அவர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், ”எங்கள் நிலத்திற்கு பக்கத்து நிலத்துக்குச் சொந்தக்காரர் தசரதன். அவர், சில மாதங்களுக்கு முன்பு எங்களது நிலத்தை தன்னிடம் விலைக்கு கொடுக்குமாறு கேட்டிருந்தார். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு எங்கள் வீட்டில் இருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள ஒரு மரத்தில் தசரதன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Advertisment

இதையடுத்து அவரது மகன் மற்றும் உறவினர்கள் தசரதனை நாங்கள்தான் அடித்துக்கொலை செய்து மரத்தில் தொங்கவிட்டதாக கூறி எங்களை மிரட்டினார்கள். இதுகுறித்து தகவலை அவலூர்பேட்டை போலீசாரிடம் தெரிவித்தோம். காவல்துறையினர் அந்த கும்பலிடம் இருந்து எங்களை காப்பாற்றி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். விசாரணை முடிந்து வெளியே வந்த போது எங்களிடம் 10 லட்சம் ரூபாய் பணமும் 2 ஏக்கர் நிலமும் நஷ்ட ஈடாக தரும்படி கேட்டு தசரதன் உறவினர்கள் மிரட்டல் விடுத்தனர்.

நாங்கள் செய்யாத தவறுக்கு அபராதம்தரமுடியாது என்று மறுத்தோம். எங்களது மருமகனிடம் கட்டப் பஞ்சாயத்துப் பேசி 5 லட்ச ரூபாய் பணத்தை பறித்துகொண்டனர். மேலும் ஐந்து லட்ச ரூபாய் இரண்டு ஏக்கர் நிலத்தை தருமாறு கேட்டு எங்களைதொடர்ந்து மிரட்டி வருகிறார்கள். இதுகுறித்து அவலூர்பேட்டை காவல் நிலையத்தில் நாங்கள் புகார் அளித்தும், அவலூர்பேட்டை போலீசார் விசாரணை செய்து எங்களை மிரட்டும் கட்டப் பஞ்சாயத்தார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. செய்யாத தவறுக்காக எங்களை தொடர்ந்து மிரட்டி வருபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காகவே தற்கொலைக்கு முயன்றோம்” என்றனர் அந்த தம்பதியினர்.

இதையடுத்து போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் தம்பதி இருவரும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.