
படிப்பதற்கு வயது ஒரு தடையே இல்லை என்பதற்கு அடையாளமாக இருபத்து ஐந்தாவது டிகிரிக்கு விண்ணப்பித்திருக்கிறார் 82 வயதை தாண்டிய முதியவர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்துள்ள கிராமம் கதிராமங்கலம். மீத்தேன் திட்டப் போராட்டத்தால் உலகெங்கும் அறியப்பட்ட பசுமையான கிராமம்தான் கதிராமங்கலம். அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்தான் 82 வயதான ஓய்வுபெற்ற அரசு பாலிடெக்னிக் ஆசிரியர் குருமூர்த்தி. அரசுப் பணியில் இருக்கும்போதே திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் மூலம் பகுதி நேரம் மற்றும் அஞ்சல்வழி பட்டப்படிப்பு மற்றும் பட்டய மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பு என படிக்கத் துவங்கினார். இதுவரை 24 பட்டங்களைப் பெற்றுள்ளார். ஓய்வு பெறுவதற்கு முன்பு 12 பட்டப்படிப்புகளை முடித்தவர் ஓய்வுபெற்றதற்குப் பிறகு 12 பட்டப்படிப்புகளைப் படித்து சாதனை படைத்திருக்கிறார். தனது 25வது பட்டப்படிப்புக்காக முதுகலை போலீஸ் அட்மினிஸ்ட்ரேஷன் என்கிற பாடப்பிரிவைத் தேர்வுசெய்து, மயிலாடுதுறையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக மண்டல அலுவலகத்தில் விண்ணப்பம் செய்துவிட்டு, அதற்கான பாடப்புத்தகங்களைப் பெற்றுக்கொண்டவருக்குப்பல்கலைக்கழக துணைவேந்தர் பார்த்தசாரதி சால்வை அணிவித்துப் பாராட்டு தெரிவித்தார்.


இதுகுறித்து குருமூர்த்தி கூறுகையில், "கற்றது கையளவு, கல்லாதது உலக அளவு என்பார்கள்.படிப்பதற்கு வயது ஒரு தடையில்லை. நேரம் தவறாமை மற்றும் திட்டமிடல் ஆகியவையே எனது படிப்புக்கு மிகவும்உபயோகமாக இருக்கிறது.திருமணம் செய்துகொள்ளாமலேயே படிக்கிறேன். இளைய தலைமுறையினர் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மூழ்கி நேரத்தை வீணடிப்பதுடன் வாழ்வை இழக்கின்றனர். பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே இருக்கிற நாட்கள்தான் வாழ்க்கை. அந்த வாழ்க்கையை அர்த்தத்துடன் வாழ வேண்டும், வாழ்க்கையை சாதாரணமாக கடந்து செல்லக் கூடாது என்பதை எனக்கு இதுபோன்ற படிப்புகள் கற்பிக்கிறது." என்கிறார் எண்பத்து இரண்டு வயதான இளைஞர்.
Follow Us