/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/TN GOV (1).jpg)
டெல்லியில் பிரதமர் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (17/06/2021) மாலை 05.00 மணிக்கு சந்தித்தார். அப்போது, தமிழகத்தின் கோரிக்கை அடங்கிய மனுவை பிரதமரிடம் தமிழக முதலமைச்சர் வழங்கினார். பிரதமர்- தமிழக முதலமைச்சர் இடையேயான சந்திப்பு 25 நிமிடங்கள் வரை நீடித்தது. இந்த சந்திப்பின்போது, முதலமைச்சருடன் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உடனிருந்தார்.
பிரதமருடனான சந்திப்பைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் இல்லத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தமிழக முதலமைச்சர் கூறியதாவது, "டெல்லியில் உள்ள அனைத்து ஊடக நண்பர்களுக்கும் வணக்கம். முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு முதல்முறையாக டெல்லி வந்து பிரதமரைச் சந்தித்துள்ளேன். கரோனா பெருந்தொற்றுப் பணிகள் காரணமாக பிரதமரை முன்கூட்டி சந்திக்க இயலவில்லை. பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு மகிழ்ச்சியானதாகவும், மனநிறைவாகவும் இருக்கிறது. எந்த கோரிக்கைகள் தொடர்பாகவும் எந்த நேரத்திலும் தன்னை தொடர்புக் கொள்ளலாம் என பிரதமர் கூறினார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/TN GOVT4444.jpg)
தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் வழங்கியுள்ளேன். தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன். செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வரக் கோரினேன். நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்துச் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தேன். ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் எனக் கேட்டுள்ளேன். திருக்குறளை தேசிய நூலக அறிவிக்க வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன். வளர்ச்சித் திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பை வழங்க பிரதமர் சம்மதம் தெரிவித்தார்.
உறவுக்கு கைகொடுப்போம், உரிமை குரல் கொடுப்போம் என்ற அடிப்படையில் சந்திப்பு அமைந்தது. மத்திய அரசிடம் முன் வைத்த கோரிக்கைளை நிறைவேற்றத் தொடர்ந்து வலியுறுத்தப்படும். தமிழகத்தின் கோரிக்கைகள் பற்றி அமைச்சர்களுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுதி அளித்தார்.
தடுப்பூசிப் பற்றாக்குறையைத் தெரிவிக்கக்கூடாது என ஒன்றிய அரசு கூறி வருகிறது. போதுமான அளவு தடுப்பூசியை ஒன்றிய அரசு அளிப்பதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளைப் படிப்படியாகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்." இவ்வாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)