
மனைவியைக்கொலை செய்துவிட்டு சாமியார் போல் வேடமிட்டு மறைந்து வாழ்ந்து வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். தன்னை விட நான்கு வயது பெரிய பெண்ணான வாணி என்பவரைக் கடந்த 2005 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். வாணி வீட்டு வேலை செய்து வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி வாணிக்கும் கணவர் ரமேஷுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது மனைவியைக் கொலை செய்து கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்துவிட்டு ரமேஷ் தப்பி ஓடிவிட்டார்.
கொலை செய்யப்பட்ட அடுத்த இரண்டு தினங்களுக்குப் பின்பு வாணியுடைய உடல் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக ஓட்டேரி காவல் நிலையத்தில் வாணியின் மகன் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷை தேடி வந்தனர். எந்த இடத்தில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. ரமேஷ் செல்போன் பயன்படுத்தாததால் அவரது இருப்பிடத்தை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாகரமேஷ்மகனின் நண்பர்ஒருவருக்கு ஜிபேயில் 1800 ரூபாய் வந்துள்ளது. மேலும் 'நான் ரமேஷ்... பிச்சை எடுத்து இந்த பணத்தை அனுப்பியிருக்கிறேன். என் மகனிடம் கொடுத்துவிடுங்கள்' எனத்தெரிவித்துள்ளார். போலீசார் அந்த வங்கி எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டதோடு பிச்சை எடுத்து அனுப்பியிருக்கிறேன் என்ற தகவலைத்தொடர்ந்து திருப்பதி, திருவண்ணாமலை, திருத்தணிஎனப்பல்வேறு கோவில் பகுதிகளில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் டெல்லியில் உள்ள 'ஸ்ரீ ஹரிஹர் உதாசின்' என்ற ஆசிரமத்தில் சாமியாராக தஞ்சம் புகுந்த ரமேஷ் அங்கிருப்பது தெரியவந்தது. எப்படியோ அறிந்து கொண்ட தனிப்படை போலீசார் டெல்லி சென்று தாடியும், காவி அங்கியும்என சாமியார் வேடத்திலிருந்த ரமேஷை கைது செய்து சென்னை கொண்டு வந்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)