ADVERTISEMENT

'29 ஆண்டுகளுக்கு பின்னர் வழிதவறி சென்றேன்;அவரை நான் பார்த்ததில்லை பேசியதில்லை''-நெகிழ்ந்த வைகோ  

10:31 PM Dec 18, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு தோழமைக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வில் வைகோ பேசுகையில், ''சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்பு 1929 ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி கதர்க்கடை கல்யாண சுந்தரனார் அவர்களுக்கும் சொர்ணம் அம்மையார் அவர்களுக்கும் தலைமகனாக பிறந்தவர் ராமையா. பின்னர் அன்பழகன் ஆனார். பத்திரிகைகளை வாங்கி ஏஜென்ட் வேலை பார்த்துக் கொண்டிருந்த பொழுது பதினோரனா தான் ஒரு நாளைக்கு வருமானம் வருகிறது என்கின்ற நிலையில் அவர்கள் மயிலாடுதுறையை விட்டு சொந்த ஊரை தாண்டி சிதம்பரத்திற்கு சென்று அங்கு ஓட்டு வீட்டில் குடியேறினார்கள். அங்கிருந்தும் பத்திரிக்கை ஏஜென்ட் வேலையை விட வில்லை. அதேநேரத்தில் ஒரு வெட்டியான் மகனைக் கொண்டுவந்து கதர்கடையிலே உட்கார வைத்தால் அந்த காலகட்டத்திலே யார் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் கதர்க்கடை கல்யாண சுந்தரனார் அதை செய்தார். தனது பெயரையும் மனவளகர் என்று மாற்றிக் கொண்டார். பெரியார் மீது அளவற்ற அன்பும் பற்றும் கொண்டிருந்த அவர் பெரியார் இடத்தில் அழைத்துக் கொண்டு போனார்.

தாடி இல்லாத பெரியாரை அவர் பார்த்திருக்கிறார். பெரியாரிடத்தில் அவரை அழைத்துக்கொண்டு போனதற்கு பிறகு அவர் பள்ளியிலே பேச்சுப் போட்டிகளில் பங்கேற்கிறார். அண்ணாமலை பல்கலைகத்தில் சேருகிறார். அங்கே பேசுகிறார். அவருடைய பேச்சு அனைவரையும் கவருகிறது. அறிஞர் அண்ணாவை சந்திக்கிறார். அண்ணாவிடத்தில் பேசுகிறார். அவரது அனுமதியைப் பெற்று 'ஆற்றோரம்' என்ற தலைப்பில் அண்ணாவை பேச வைக்கிறார். அதன் பிறகு அண்ணா பேராசிரியர் மீது ஒரு பற்றுதல் ஏற்பட்டு விடுகிறது. நான் பேராசிரியர் இடத்தில் நெருக்கமான அன்பை பெற்று இருந்தேன். அவரது பாசத்தை பெற்றிருந்தேன். ஆனால் இடைப்பட்ட காலத்தில் 29 ஆண்டுகளுக்குப் பின்னர் நான் வழிதவறி சென்றேனோ தெரியவில்லை. அந்த காலகட்டத்தில் அவரை நான் பார்த்ததில்லை. அவரிடம் நான் பேசியதில்லை.

மூன்று முறை எனது இல்லத்திற்கு வந்து தங்கி இருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் வந்து விட்டால் குற்றாலத்தில் சீசன் வந்துவிடும். சாரல் மழை அடிக்கும். நான்கு நாள் அங்கே பேராசிரியரை கொண்டு போய் தங்க வைப்பேன். நானே பழத்தோட்ட அருவிகளுக்கு அவரை கைய பிடித்து அழைத்துச் சென்று குளிக்க வைப்பேன். திரும்பக் கொண்டு வந்து மாலையில் மூன்று பொதுக்கூட்டங்கள் நடக்கும். அப்படி ஒரு அன்பைப் பெற்று இருந்தேன். பேராசிரியருடைய நூற்றாண்டு நினைவு விழாவில் ஒன்றைச் சொல்ல வேண்டும். அவருடைய ஊக்கமும், ஆக்கமும், அவர் தந்த உற்சாகமும் தான் நம்முடைய தலைவரை முதலமைச்சராக, திமுகவின் தலைவராக ஆக்கி வைத்திருக்கிறது. 35ல் சட்டமன்றத்திற்கு சென்றார். 43 ஆண்டுகள் திமுகவின் பொதுச் செயலாளராக இருந்திருக்கிறார். ஒரு இயக்கத்தில் 43 ஆண்டுகள் பொதுச் செயலாளராக இருப்பது என்பது சாதாரண காரியம் அல்ல. திமுகவிற்கு சோதனைகள் ஏற்பட்ட ஒவ்வொரு முறையும் கலைஞர் அரணமாக இருந்தார்'' என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT