After 15 years, court sentenced accused to double life imprisonment

Advertisment

திருச்சி கிராப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் துரைராஜ்.இவரது டிரைவர் சக்திவேல். இவர்கள் இருவரும் கடந்த 2007 ம் ஆண்டு காருடன் எரித்து கொலை செய்யப்பட்டனர். திருச்சி- திண்டுக்கல் சாலையில் வையம்பட்டி அருகே இந்த கொடூர இரட்டை கொலை சம்பவம் நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் மட்டும் இன்றி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு தொடர்பாக முதலில் வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் துப்பு எதுவும் துலங்கவில்லை. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீஸ் பிரிவு துணை சூப்பிரண்டு மலைச்சாமி தலைமையில் போலீசார் தீவிர புலன் விசாரணை நடத்தினார்கள்.

புலன் விசாரணையின் அடிப்படையில் திருச்சி திருவரங்கத்தை சேர்ந்த சாமியார் கண்ணன், அவரது தோழி யமுனா, யமுனாவின் தாயார் சீதாலட்சுமி ஆகிய மூவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். யமுனாவுடன் சாமியார் கண்ணனுக்கு திருமணத்தை மீறிய உறவு இருந்தது. இந்த நிலையில் தொழில் அதிபர் துரைராஜ் யமுனாவுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டதால் ஏற்பட்ட போட்டி காரணமாக இந்த கொலை நடைபெற்றதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் கூறப்பட்டது.

இது தொடர்பான வழக்கு திருச்சி இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், வயது முதிர்வு மற்றும் நோய் காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சீதாலட்சுமி மரணம் அடைந்தார். இதனை தொடர்ந்து மற்ற இருவர் மீதும் தொடர்ந்து விசாரணை நடந்து வந்தது. அவர்கள் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

Advertisment

இந்த வழக்கில் மொத்தம் 50 சாட்சிகள் சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜர் ஆகி சாட்சியம் அளித்தார்கள். அவர்களில் டி.எஸ்.பி. மலைச்சாமி, கிராம நிர்வாக அதிகாரி மற்றும் அரசு டாக்டர் ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவார்கள். இந்த வழக்கில் சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின்னர் வக்கீல்கள் விவாதம் நடைபெற்றது.

இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வக்கீல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கில்கள் வாக்குவாதம் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து இந்த வழக்கின் தீர்ப்பு இன்று 25ம் தேதி வழங்கப்படும் என நீதிபதி ஜெயக்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து இன்று மதியம் 12 மணி அளவில் திருச்சி மத்திய சிறை மற்றும் திருச்சி மகளிர் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள சாமியார் கண்ணன் மற்றும் யமுனா ஆகியோர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்கள். அவர்களுக்கு சாமியார் கண்ணன் கள்ளக்காதலி யமுனா ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி திருச்சி இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.