Skip to main content

நாய் மீது பாசம்...மக்களின் நெகிழ்வுச் செயல்!

Published on 14/08/2020 | Edited on 14/08/2020

 

dog -erode -

 

வளர்ப்பு நாய்கள் நன்றியுள்ள ஜீவன்களாக மனிதர்களால் பார்க்கப்படுகிறது. ஆனால் கோபத்தில் யாரையாவது திட்டும் போது "போடா நாயே..." எனச் சொல்வது நம்மில் பலரது வாடிக்கை. இன்றளவும் பணக்காரர்கள் வீட்டு ஏ.சி. அறையிலும், ஏழை வீட்டுக் கொட்டகையிலும், செல்லப் பிராணியாக வீட்டில் ஒரு உறுப்பினராக நாய்கள் இருந்து வருகிறது.

 

ஈரோட்டில் ஒரு தெரு மக்களிடம் பழகி வாழ்ந்து வந்த அந்த நாயின் இறப்பு அப்பகுதி மக்களையே துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது. ஈரோடு எஸ்.கே.சி. ரோடு என்ற தெருவில் நூற்றுக்கும் மேலான குடியிருப்புகள் மற்றும் கடைகள் உள்ளன. அப்பகுதி மக்கள் அனைவரும் பிரவுனி (எ) வெள்ளையனை (ஆண் நாய்) செல்லமாக நீண்ட காலம் வளர்த்து வந்தார்கள். 

 

இந்த பிரவுனி எஸ்.கே.சி. ரோடு முழுவதும் சுற்றி வலம் வரும். அந்தப் பகுதி மக்களுக்கு ஒரு பாதுகாவலனாக இருந்தது. அந்த நாய்க்கு தேவையான உணவுகளை  மக்கள் கொடுத்து வந்தனர். இப்படிச் செல்லமாக வளர்ந்த அந்த நாய் சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலக் குறைவால் இறந்து விட்டது. இதனால் அங்குள்ள மக்கள் கடும் வேதனை அடைந்தனர். தொடர்ந்து அப்பகுதி மக்கள் அந்தத் தெருமுன்பு தங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் இறந்தால் எப்படி கண்ணீர் அஞ்சலிபேனர் வைப்பார்களோ, அதுபோல் இறந்த அந்த நாய்க்கு கண்ணீர் அஞ்சலி பேனர் அடித்துத் தங்களின் துக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள்.          

 

"பிரவுனி நாய் எங்கள் பகுதியின் செல்லப் பிள்ளையாக வளர்ந்து வந்தது. பிரவுனி இரவு நேரம் முழுவதும் இந்தப் பகுதி முழுவதும் சுற்றி வந்து எங்களைப் பாதுகாத்து வந்தது. பிரவுனியால் எங்களுக்கு எந்தத் தொந்தரவும் வந்ததில்லை. பகுதி மக்கள் அனைவரும் முகத்தையும் நன்கு அடையாளம் தெரிந்து வைத்திருந்தது. இந்தப் பகுதிக்கு வேறு நபர்கள் யாராவது இரவில் உள்ளே வந்தால் குரைத்து அவர்களை விரட்டி விடும். நாங்கள் கொடுக்கும் உணவைச் சாப்பிட்டு வந்தது. திடீரென உடல்நலக் குறைவால் பிரவுனி இறந்துவிட்டது. பிரவுனி இறந்தது எங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்தது போல உள்ளது" என வேதனையோடு கூறுகிறார்கள் அப்பகுதி மக்கள்.

 

Ad

 

இறந்து போன நாய் ஒன்றுக்கு மக்கள் "நன்றி மறப்பது நன்றன்று" என்பது போல் கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்துள்ள சம்பவம் ஈரோட்டில் நெகிழ்ச்சியை எற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்