Skip to main content

நெல்லையில் மட்டும் இவ்வளவு பாதிப்பா?- வெளியான அதிகாரப்பூர்வ பட்டியல்

Published on 25/12/2023 | Edited on 25/12/2023
Affected in Nellai District- Publication of official list

சென்னையை தாக்கிய மிக்ஜாம் புயலைத் தொடர்ந்து தென் மாவட்டங்களில் பொழிந்த அதீத கன மழையால் தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிப்புக்கு உள்ளாகியது. தற்பொழுது படிப்படியாக மீண்டு வருகிறது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் பல இடங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ பட்டியல் தற்பொழுது வெளியாகியுள்ளது.

முன்னதாக மாவட்டம் முழுவதாகவும் நிவாரண பணிகளுக்காக கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்ற நிலையில் தற்போது இந்த அதிகாரப்பூர்வ பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது.

வெளியான அந்த அதிகாரப்பூர்வ பாதிப்பு பட்டியலின் படி நெல்லையில் கனமழை மற்றும் வெள்ளப்பாதிப்பால்  16 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த ஒரு நபரின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் என்ற வகையில் மொத்தமாக 80 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட உள்ளது. 67 மாடுகள் உயிரிழந்துள்ளது ஒரு மாட்டிற்கு தலா 37 ஆயிரத்து 500 ரூபாய் நிவாரணம் என்ற வகையில் மொத்தமாக 25 லட்சத்து 12,500  ரூபாய் இழப்பீடாக ஒதுக்கப்பட்டுள்ளது.

Affected in Nellai District- Publication of official list

1,064 வீடுகள் சேதம் அடைந்துள்ளது. ஒரு  வீட்டிற்கு தலா10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் என்ற வகையில் 1 கோடியே 6 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் இழப்பீடு ஒதுக்கப்பட்டுள்ளது. 504 ஆடுகள் உயிரிழந்த நிலையில் ஒரு ஆட்டுக்கு தலா 4,000 ரூபாய் என்ற வகையில் 20 லட்சத்துக்கு 16 ஆயிரம் ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. கன்று குட்டிகள் 135 உயிரிலிருந்த நிலையில் ஒரு கன்று குட்டிக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் என்ற வகையில், 27 லட்சம் ரூபாய் இழப்பிடு ஒதுக்கப்பட்டுள்ளது.

28,392 கோழிகள் உயிரிழந்த நிலையில் ஒரு கோழிக்கு 100 ரூபாய் என்ற வகையில் 28 லட்சத்து 39 ஆயிரத்து 200 ரூபாய்  இழப்பீடு ஒதுக்கப்பட்டுள்ளது. இப்படியாக மொத்த கணக்கீட்டின்படி 2 கோடியே 87 லட்சத்து 7ஆயிரத்து 700 ரூபாய் முதல் கட்டமாக ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரால் 21 நபர்களுக்கு 58 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய்க்கான நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழ்நாடு கேட்டது... மத்திய அரசு கொடுத்தது - நிவாரண நிதி ஒதுக்கீடு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Central government relief fund allocation to tamilnadu

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு இதுவரை நிதி வழங்காமல் இருந்தது.

இதற்கிடையில், வெள்ள பாதிப்புகளுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் கடந்த 3ஆம் தேதி தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தமிழகம் சந்தித்து வரும் இயற்கை பேரிடர்கள் பற்றியும் அதன் விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் பெயரில், தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் குமணன் இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Next Story

4 கோடி ரூபாய் சிக்கிய விவகாரம்; ஹோட்டல் ஊழியர்கள் காவல் நிலையத்தில் ஆஜர்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
 4 crore rupees issue; Hotel staff present at police station

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவத்தில் ரொக்கமாக நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் நான்கு கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய  ஊழியர்கள் மற்றும் உறவினர்களுக்கு காவல்துறை சார்பில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பட்டிருந்தது. தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய இரண்டு ஊழியர்கள் தற்போது தாம்பரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். ராஜேந்திரனின் உறவினர் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் என்பவரிடம் இன்று மாலை விசாரணை நடத்த தாம்பரம் போலீசார் முடிவு செய்திருப்பதாகவும்  தகவல்கள் வெளியாகி உள்ளது.