/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_3160.jpg)
தஞ்சாவூர் மாவட்டம், நாச்சியார்கோவிலைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருக்கு மாரியப்பன், சாமிநாதன் என இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதில் சாமிநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் அவரது சகோதரிக்கு அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகில் உள்ள அணைகுடம் கிராமத்தில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் நேற்று திருமணம் நடைபெற்றது.
அந்த திருமணத்தில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து வழக்கறிஞர் சாமிநாதன் நேரடியாக திருமண மண்டபத்திற்கு வந்துள்ளார். அப்போது திருமண மண்டபத்தின் அருகில் இருந்த ஒரு டீக் கடையில் டீ குடிப்பதற்காக சென்று அமர்ந்துள்ளார் சாமிநாதன். சிறிது நேரத்தில் இருசக்கர வாகனங்களில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் சாமிநாதனை சரமாரியாக கழுத்து உட்பட பல பகுதிகளில் அரிவாளால் வெட்டியுள்ளது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சாமிநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதை பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், இது குறித்து தா.பழூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அங்கிருந்து போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று வழக்கறிஞர் சாமிநாதன் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வழக்கறிஞர் கொலை செய்யப்பட்ட அந்த டீக்கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடிவருகின்றனர். தங்கை திருமணத்திற்கு வந்த வழக்கறிஞரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி செல்லும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)