‘ரசிகர்களுக்கு அட்வைஸ்’ - செய்தியாளர்களைச் சந்தித்து த.வெ.க. தலைவர் விஜய் பேட்டி!

Advice to fans TVk leader Vijay meets reporters and interviews

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடைபெறும் ஜனநாயகன் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய் இன்று (01.05.2025) மாலை சென்னையில் இருந்து தனி விமான மூலம் மதுரைக்குச் செல்கிறார். அவரது பயணத்திட்டத்தின் படி மாலை 04:00 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்குச் செல்கிறார். இதன் காரணமாக த.வெ.க. தொண்டர்களும், விஜய் ரசிகர்களும் மதுரையில் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர். எனவே மதுரை விமான நிலையத்தில் காலை முதலே கடும் நெரிசல் காணப்படுகிறது.

அதோடு விமான நிலையம் அருகே விஜய் ரசிகர்கள் பைக் சாகசம் போன்றவற்றிலும் ஈடுபட்டதால் அப்பகுதியில் கடும் நெரிசல் காணப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் சார்பில் அக்கட்சியின் நிர்வாகிகளுக்கு முக்கிய அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது. அதில் விமான நிலைய வளாகத்துக்குள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மட்டுமே உள்ளே வர வேண்டும். ரசிகர்கள் யாரும் உள்ளே வரக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை விமானநிலையத்தில் விஜய் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “எல்லாருக்கும் வணக்கம். மதுரை ஏர்போர்ட்ல நம்முடைய நண்பர்கள், நண்பிகள், தோழர்கள், தோழிகள் எல்லாருமே வந்து இருக்காங்க.

முதல்ல அவங்க எல்லாருக்குமே வணக்கம். மதுரை மக்கள் எல்லாருக்குமே என்னுடைய வணக்கம். உங்களுடைய அன்புக்குக் கோடான கோடி நன்றிகள். நான் இன்னைக்கு போறது ஜனநாயகன் படத்தினுடைய வேலைக்காக போறேன். கொடைக்கானல் ஒரு ஷூட்காக போறேன். கூடிய சீக்கிரமே மதுரை மண்ணுக்குக் கட்சி சார்பா வேற ஒரு சந்தர்ப்பத்துல உங்க எல்லாரையும் மீட் பண்ணி நான் பேசுறேன். இன்னைக்கு ஒரு ஒன் ஹவர்ல நாங்க லேண்ட் ஆகி நான் உங்க எல்லாரையுமே பார்த்துட்டு நான் என் வேலையை பார்க்க போயிடுறேன். நீங்களும் சேப்பா அவங்க அவங்க வீட்டுக்கு போயிடுங்க. யாரும் என்னுடைய வேனுக்கு பின்னாடியோ, காருக்கு பின்னாடியோ வந்து ஃபாலோ பண்றதோ, இந்த பைக்ல ஃபாஸ்ட்டா வர்றதோ, பைக் மேல நின்னுகிட்டு பைக் ஓட்டுறது, ஹெல்மெட் இல்லாம இந்த மாதிரி எல்லாம் வராதீங்க.

ஏன்னா அந்த காட்சி எல்லாம் பாக்குறதுக்கே மனசுக்கு வந்து ரொம்ப பதட்டமா இருக்கு. கூடிய சீக்கிரமே வேற ஒரு சந்தர்ப்பத்துல உங்க எல்லாரையும் நான் மீட் பண்ணி நான் பேசுறேன். அதுவரைக்கும் உங்க எல்லாருக்குமே என்னுடைய மே தின வாழ்த்துக்கள். லவ் யூ ஆல். அண்ட் சீ யூ ஆல். இத நான் மதுரை ஏர்போர்ட்ல இந்த மெசேஜ் என்னால கன்வே பண்ண முடியுமான்னு எனக்கு தெரியல அங்க சிச்சுவேஷன் எப்படி இருக்கும்னு எனக்கு தெரியல” எனத் தெரிவித்தார். அரசியல் கட்சி ஆரம்பித்த பிறகு விஜய் அளித்த முதல் பேட்டி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

madurai airport PRESS MEET Tamilaga Vettri Kazhagam tvk vijay
இதையும் படியுங்கள்
Subscribe