
பொங்கல் பரிசு வழங்கப்படும் ரேஷன் கடைகளின் முன், விளம்பர பேனர்கள் வைக்கக் கூடாது என்றும், வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி, 2,500 ரூபாய் ரொக்கப் பணம் உள்பட பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான டோக்கன்களில் முதல்வர், அமைச்சர்கள் புகைப்படங்கள் இடம்பெறத் தடை கோரி, திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், டோக்கன்களில் அரசியல் தலைவர்களின் புகைப்படங்களை அச்சிடக் கூடாது என உத்தரவிட்டிருந்தது. ஆனால், பொங்கல் பரிசு தொடர்பாக ஆளும்கட்சியினர், ரேஷன் கடைகள் முன் பேனர்கள் வைத்துள்ளதாகக் கூறி, திமுக தரப்பில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன்,‘அரசு சின்னம் பதித்து,39,000 ரேஷன் கடைகளின் முன், அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. துண்டுப் பிரசுரங்கள் வினியோகிக்கப்படுகின்றன. அனுமதியின்றி பேனர்கள் வைக்கமாட்டோம் எனஆளும்கட்சியும், எதிர்க்கட்சியும் உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளன’ என்று சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண், 'பொங்கல் பரிசு திட்டத்துக்கு உரிமைகோரி, எதிர்க்கட்சியும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளன. தேர்தல் நேரத்தில்,தங்களின் சாதனைகளை மக்களிடம் கொண்டுசேர்க்க பேனர்கள் வைக்கப்படுகின்றன. அதற்குத் தடை விதிக்கக்கூடாது.ஏற்கனவே, பொங்கல் பரிசு தொகுப்பு பையில் முதல்வர் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வரின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றை வழங்கக்கூடாது என உத்தரவிடக் கூடாது’ என்று கோரிக்கை விடுத்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘ரேஷன் கடை அருகில் விளம்பரம், பேனர் இருக்கக் கூடாது. பேனர்கள் வைக்கப்பட்டிருந்தால் அவற்றை அகற்ற வேண்டும். அதேபோல, ரேஷன் கடைகளுக்குள் விளம்பர துண்டுப் பிரசுரங்கள் வினியோகிக்கக் கூடாது. பொது இடங்களில் அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்பட்டிருந்தால், அவற்றை அகற்ற வேண்டும். அதேசமயம், பொங்கல் பரிசு தொகுப்பு பையில் முதல்வர் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் படங்கள் இடம்பெற அனுமதிக்கிறோம்’ என உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)