ADMK woman executive refuses to vacate house Legal owner!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகில் உள்ள சலாவதி கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவர், திண்டிவனம் நகரில் வசித்து வந்த மாணிக்கம் என்பவரிடம் இருந்து கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு வீடு ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார். அந்த வீட்டில் ஏற்கனவே முத்துகிருஷ்ணன் என்பவரது மனைவி மீனா என்பவர் வாடகைக்குக் குடியிருந்து வந்துள்ளார். இவர் காவேரிப்பாக்கம் அதிமுக மகளிர் அணியைச் சேர்ந்த பிரமுகர். அந்தப் பகுதியில் பிரபலமான இவர், தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி ஏழுமலையின் வீட்டுக்கு வாடகை தராமல் சொந்த வீடு போல அதில் வசித்து வந்துள்ளார்.

Advertisment

ஏழுமலை பலமுறை கேட்டும் பதில் தராததால் வீட்டை காலி செய்யுமாறும் மீனாவிடம் பலமுறை வலியுறுத்தியுள்ளார். ஆனால், மீனா வீட்டை காலி செய்ய மறுத்து வந்துள்ளார். இந்த நிலையில் ஏழுமலை, வழக்கறிஞர் ஒருவர் மூலம் திண்டிவனம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். இந்த வழக்கு, திண்டிவனம் மாவட்ட கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிமன்றம், மீனா வீட்டை காலி செய்யுமாறு தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பின் படி நீதிமன்ற ஊழியர்கள், வருவாய்த் துறையினர், காவல் துறையினர் ஏழுமலை வீட்டுக்கு வந்தனர். மீனா குடியிருக்கப் பயன்படுத்திய அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் வீட்டை விட்டு அதிரடியாக அப்புறப்படுத்தினர். அதன் பிறகு வீட்டைப் பூட்டி, அதன் சாவியை வீட்டு உரிமையாளர் ஏழுமலையிடம் ஒப்படைத்தனர்.

Advertisment