"அ.தி.மு.க இன்னும் 100 ஆண்டுக் காலம் ஆட்சியில் இருக்கும் என உறுதியை ஏற்றுள்ளோம்" என்கிறார் அமைச்சர் காமராஜ்.
இரண்டு மாதங்களாக அ.தி.மு.க.வில் மையம் கொண்டிருந்த 'யார் முதல்வர் வேட்பாளர்?' என்கிற புயல் ஒரு வழியாகக் கடந்த ஏழாம் தேதி கரையேறியது. எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளர் என அறிவித்ததோடு கட்சியின் செயல்பாடுகளைக்கவனித்துக் கொள்ள 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவைஅமைத்தது அதிமுக.
அந்தக்குழுவில் மூத்த நிர்வாகிகளுக்கு இடம் கொடுக்கவில்லை, சாதியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்பது போன்ற பல சர்ச்சைகள் இடம்பெற்றிருப்பது ஒருபுறம் இருக்க, டெல்டா மாவட்ட அமைச்சர்களில் ஒருவரான அமைச்சர் காமராஜூக்கு அந்தக் குழுவில் இடம் கொடுத்திருப்பது, அ.தி.மு.க.வினர் பலரையும்அதிர்ச்சியில்ஆழ்த்தியுள்ளது. அமைச்சரின் ஆதரவாளர்களோ குதூகலத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உச்சபட்ச கூடுதல் பொறுப்போடு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிக்கு வந்த அமைச்சர் காமராஜை பலத்த கோஷங்களோடு வரவேற்றனர் அவரது ஆதரவாளர்கள். தெற்கு வீதியில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்று மாலை அணிவித்தார். அங்கு மாவட்டம் முழுவதும் உள்ள கட்சி நிர்வாகிகள் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்ததால், அனைவரும் ஆப்செண்ட் ஆகாமல் சால்வை, மாலைகளோடு ஆஜராகியிருந்தனர்.
கூட்டத்திற்கு நடுவே கெத்துகாட்டியபடியே கட்சி அலுவலகத்திற்கு வந்தவர், வழக்கம் போலவே செய்தியாளர்கள் எல்லாரும் வந்திருக்கிறார்களா எனக் கேட்டார். அங்கு குழுமியிருந்த செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்த அமைச்சர் காமராஜோ, "சாதாரண ஏழை எளிய மக்கள் அ.இ.அ.தி.மு.க.வை நம்பியுள்ளார்கள். மூன்றாவது முறையாக 2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றிபெரும். இந்த இயக்க தொண்டர்கள் இணைந்து அம்மாவின் கனவை நினைவாக்கும் வகையில், இன்னும் 100 ஆண்டுக் காலம் அ.தி.மு.க ஆட்சியில் இருக்கும் என்று உறுதியை ஏற்றுள்ளோம்" எனக் கூறினார்.