Skip to main content

ரோட்டில் செல்பவர்களை எல்லாம் தலைவராக ஏற்க முடியாது - வளர்மதி பேச்சு!

Published on 25/04/2022 | Edited on 25/04/2022

 

jlk

 

சசிகலாவை அதிமுகவில் இணைக்கும் எண்ணம் அதிமுகவில் யாருக்கும் இல்லை என்று என்று முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தெரிவித்துள்ளார். மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். சசிகலா தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் வருமாறு, "சசிகலாவை அதிமுகவில் இணைக்கும் எண்ணம் எந்த ஒரு அதிமுக தொண்டருக்கும் கிடையாது. அதிமுகவின் தலைமை யார் என்பதற்கு சமீபத்தில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பே சாட்சி. அதிமுகவில் உள்ள ஒன்றரை கோடி தொண்டர்களும் எங்கள் முடிவை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். அதிமுகவின் தலைமை இபிஎஸ், ஓபிஎஸ் மட்டுமே. அவர்கள் சொல்வதற்கு நாங்கள் கட்டுப்பட்டவர்கள். ரோட்டில் செல்பவர்களை எல்லாம் தலைமையாக ஏற்க முடியாது. 

 

இந்த 11 மாத திமுக ஆட்சியில், அதிமுக அரசில் தொடங்கப்பட்ட பல்வேறு திட்டங்களை அவர்கள் வேண்டுமென்றே நிறுத்திவிட்டார்கள். ஜெயலலிதா கொண்டுவந்த பல திட்டங்களை வேறு பெயரில் கொண்டு வந்து, தாங்கள் புதிதாகக் கொண்டுவந்ததைப் போல பெருமைப்படுகிறார்கள். சுய சிந்தனையோடு திமுக ஆட்சியில் இதுவரை எந்த ஒரு திட்டமும் கொண்டு வரப்பட்டதாகத் தகவல் இல்லை. அடுத்தவர்களின் திட்டங்களுக்கு தங்கள் பெயரைச் சூட்டிக்கொள்ள விரும்புகிறவர்கள் மக்களுக்கு என்ன செய்ய நினைப்பார்கள். அதிமுக ஆட்சி என்பது எப்போதும் மக்களுக்கான ஆட்சியாக இருந்தது. ஆனால் தற்போது அப்படி இல்லை" என்றார். 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி மீதான வழக்கு ஒத்திவைப்பு

Published on 12/10/2023 | Edited on 12/10/2023

 

Adjournment of the case against former ADMK minister P. Valarmathi

 

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி வந்த ஆனந்த் வெங்கடேஷ், கடந்த கால ஆட்சியின் போது அமைச்சர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாகக் கூறி தொடரப்பட்ட வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களின் வழக்குகளைத் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வந்தார். அந்த வகையில் கடந்த 2001 முதல் 2006 வரையிலான அதிமுக ஆட்சியின் போது சமூக நலத்துறை அமைச்சராக இருந்த வளர்மதி மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இருப்பினும் இந்த வழக்கில் இருந்து வளர்மதி விடுவிக்கப்பட்டிருந்தார். இத்தகைய சூழலில் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட வழக்கை கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி மீண்டும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.

 

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு குறித்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவிக்கையில், “கீழமை நீதிமன்றங்களின் செயல்களைப் பார்க்கும் போது நீதித்துறையை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும். வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதால் என்னை வில்லனாகப் பார்க்கின்றனர். ஒவ்வொரு வழக்கிலும் விசாரணையை யாரும் எதிர்கொள்ள விரும்பவில்லை” எனத் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை, முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி ஆகியோர் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைத்திருந்தார்.

 

இதனைத் தொடர்ந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை ஒத்தி வைக்க வளர்மதி தரப்பு கோரிக்கை வைத்தது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜெயச்சந்திரன், அதிமுக முன்னாள் அமைச்சர் பா. வளர்மதிக்கு எதிரான வழக்கை நவம்பர் 6 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார். 

 

 

Next Story

“என்னை வில்லனாகப் பார்க்கின்றனர்” - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

Published on 08/09/2023 | Edited on 08/09/2023

 

They see me as a villain Justice Anand Venkatesh

 

‘என்னை வில்லனாகப் பார்க்கின்றனர்’ எனச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

 

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி வரும் ஆனந்த் வெங்கடேஷ், கடந்த கால ஆட்சியின் போது அமைச்சர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாகக் கூறி தொடரப்பட்ட வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களின் வழக்குகளைத் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறார். அந்த வகையில் அமைச்சர்களான பொன்முடி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன் ஆகியோர் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட வழக்குகளைத் தாமாக முன்வந்து மீண்டும் விசாரித்து வருகிறார்.

 

அந்த வகையில் அமைச்சர் ஐ. பெரியசாமி, அதிமுக முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி ஆகியோரின் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட வழக்கை நேற்று மீண்டும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

 

அப்போது இந்த வழக்கு குறித்து நீதிபதி ஆன்ந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவிக்கையில், “கீழமை நீதிமன்றங்களின் செயல்களைப் பார்க்கும் போது நீதித்துறையை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும். வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதால் என்னை வில்லனாகப் பார்க்கின்றனர். ஒவ்வொரு வழக்கிலும் விசாரணையை யாரும் எதிர்கொள்ள விரும்பவில்லை” எனத் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை, அமைச்சர் ஐ. பெரியசாமி, முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி ஆகியோர் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.  மேலும் இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.