ADMK struggle announcement for New laws brought into force 

இந்தியத் தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றிற்கு பதிலாக மத்திய அரசு கொண்டு வந்த பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் கடந்த 1 ஆம் தேதி (01.07.2024) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் புதிய குற்றவியல் சட்டத்தின் மூலம் இந்தித் திணிக்கப்படுவதை எதிர்த்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிவிப்பில், “புதிய குற்றவியல் திருத்தச் சட்டத்தின் மூலம் இந்தி திணிக்கப்படுவதை எதிர்த்தும் அதிமுக வழக்கறிஞர் பிரிவின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மத்திய பா.ஜ.க. அரசால் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு, 01.07.2024 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்களில் உள்ள குளறுபடிகளை நீக்கக் கோரியும், இந்த 3 புதிய சட்டங்களுக்கு சமஸ்கிருதம் கலந்த இந்தியில் பெயர் வைத்து அப்பட்டமான இந்தித் திணிப்பு செய்துள்ளதைக் கண்டித்தும், அச்சட்டங்களுக்கு மீண்டும் ஆங்கிலத்தில் பெயர் சூட்டக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

Advertisment

அதிமுக வழக்கறிஞர் பிரிவின் சார்பில் நாளை (05.7.2024) நண்பகல் 12 மணிக்குச் சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிமுக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் இன்பதுரை தலைமையில் அறவழியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில நிர்வாகிகளும், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகளும், வழக்கறிஞர்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.