
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் தேனி வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தேனியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் தேனி பாராளுமன்ற உறுப்பினருமான தங்க தமிழ்ச் செல்வன் தலைமை தாங்கினார். பெரிய குளம் சட்டமன்ற உறுப்பினர் சரவண குமார், பெரியகுளம் முன்னாள் நகர செயலாளர் செல்லப்பாண்டி. ஜீவா உள்பட மாவட்டத்திலுள்ள கட்சி பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் மண்டல பொறுப்பாளரும் நிதி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சருமான தங்கம் தென்னரசு கலந்து கொண்டு வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் பணியாற்றுவது குறித்து திமுக வடக்கு மாவட்ட நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்கள்.

அதன்பின் நிர்வாகிகள் மத்தியில் ஊரக வழிச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும் போது, “திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்பங்களும் ஏதோ ஒரு வகையில் பயன் பெற்றுள்ளது. திமுக ஆட்சி ஒரு பொற்கால ஆட்சி, தலைசிறந்த ஆட்சி இதற்கு முன்பு இதுபோல் ஒரு ஆட்சி நடைபெற்றது இல்லை. 2026 தேர்தலில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மீண்டும் இரண்டாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என்கிற இலக்குடன் கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். கட்சி நிர்வாகிகளுக்குள் உள்ள போட்டி, பொறாமை, வருத்தங்கள் ஆகியவற்றை மறந்து விட்டு வெற்றி ஒன்று தான் நமது இலக்கு என்பதை நோக்கிப் பயணிக்க வேண்டும்.
தேனியில் திமுக எம்.பி.தேர்தலில் வெற்றி பெறாது என்று கூறினார்கள். ஆனால் உங்களின் உழைப்பினால் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். நாம் ஒற்றுமையாக இருந்தால் சட்ட மன்றத் தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றி பெறலாம். திமுக மீண்டும் இரண்டாவது முறையாக வெற்றி பெறும். அதிமுக இந்த முறை எதிர்க்கட்சியாக கூட வர முடியாது. அந்த நிலையை கட்சி நிர்வாகிகள் உருவாக்கிட வேண்டும். 2026 தேர்தலில் நூற்றுக்கு நூறு வெற்றி என்பதை குறிக்கோளாக வைத்து பணியாற்ற வேண்டும்” என்று கூறினார்.