ADMK is a party beyond caste and religion Edappadi Palaniswami

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில், 'சனாதனம் என்ற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான். இந்த மாநாட்டை பார்க்கின்ற போது சிலருக்கு எரிச்சல் இருக்கும். அவர்களுக்கு முடிந்த வரை எரியட்டும். சினிமாவில் சமஸ்கிருதம் கலந்த தமிழ் வசனங்கள் பேசப்பட்டுக் கொண்டிருந்த பொழுது கலைஞர் தான் 'எந்த காலத்திலடா பேசினாள் பராசக்தி' என வசனம் வைத்தார். எல்லா சமூக மக்களையும் ஒரே இடத்தில் குடி வைத்து அந்த இடத்திற்கு சமத்துவபுரம் என்று பெயர் வைத்து சனாதனத்திற்கு சம்மட்டி அடி கொடுத்தவர்தான் கலைஞர்.

Advertisment

டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாக பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். விஸ்வகர்மா திட்டத்தை கொண்டு வந்திருக்கின்ற நரேந்திர மோடி, வரும் நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைய வேண்டும். அடைவார்'' என்றார். மீண்டும் தன்னுடைய பேச்சுக்கு விளக்கமளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 'சனாதனம் பற்றி நான் பேசியது சரியானது. எனது பேச்சை பாஜகவினர் திரித்துக் கூறுகின்றனர். என்ன வழக்கு போட்டாலும் அதை சந்திக்க நான் தயார்'' என்றார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்த கருத்துக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்புகள் குவிந்து வருகின்றன.

Advertisment

இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் இது குறித்து பேசுகையில், “மக்களை திசை திருப்புவதற்காகவும், விலைவாசி உயர்வை மறைப்பதற்காகவும் சனாதனத்தை ஒழிப்போம் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி அதிமுக. ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அதிமுக நிலைப்பாடு என்பது 2018 இல் அப்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு முன்பு எதிர்த்தது. தற்போதைய சூழலில் ஆதரிக்கிறோம்” என தெரிவித்தார்.