/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kavyet-1i.jpg)
ஓபிஎஸ் தரப்பு உயர்நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டிற்கு செல்லப்போகும் நிலையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இருந்து முன்னெச்சரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி தீர்ப்பளித்திருந்தார். இந்த தீர்ப்பினை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். அந்த மேல் முறையீட்டு விசாரணையில் அதிமுக பொதுக்குழு செல்லும் என இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு நேற்று தீர்ப்பளித்தது. தீர்ப்பினை வரவேற்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கொண்டாடி வரும் வேளையில் மேல்முறையீட்டிற்கு செல்லும் திட்டம் இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தெரிவித்திருந்தது.
தீர்ப்பு குறித்து ட்விட்டரில் "உடனிருந்தே கொல்லும் வியாதிகளாக, நம் இயக்கத்தால் வாழ்வு பெற்ற ஒருசில சுயநல விஷமிகள், திமுக-விற்கு ஆதரவாக செயல்பட்டு வந்தனர். இவர்களின் கெடுமதிகளை முறியடிக்க, தூய்மையான மனதுடன் நீதி, நேர்மை, நாணயத்தை நம்பி, கழகத் தொண்டர்களின் முழு ஆதரவுடன் போராடி வருகிறோம். இன்றைய தினம் தர்மம், நீதி வென்றுள்ளது" என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு மேல் முறையீடு செய்யும் என்ற நிலையில் தங்கள் தரப்பில் எந்த ஒரு கருத்தையும் கேட்காமல் உத்தரவுகளை வழங்கக்கூடாது என எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இருந்து உச்சநீதி மன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)