Skip to main content

அ.தி.மு.க. அலுவலகத்திற்கு சீல்: வழக்கு ஒத்திவைப்பு! 

Published on 14/07/2022 | Edited on 14/07/2022
admk office seal chennai high court

 

அ.தி.மு.க. அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதை அகற்றக் கோரிய வழக்கின் விசாரணை நாளை (15/07/2022) ஒத்திவைக்கப்பட்டது. 

 

அ.தி.மு.க. அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதை அகற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு இன்று (14/07/2022) நீதிபதி சதீஸ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. 

 

அப்போது, நீதிபதி, அ.தி.மு.க. அலுவலகத்திற்கு பாதுகாப்பு வழங்கவில்லையா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர், பாதுகாப்பு தரவில்லை என்று வாதிட்டார். இதைத் தொடர்ந்து, பாதுகாப்பு வழங்கவில்லை எனக் கூறுவது தவறு என காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. நீதிபதி, எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதத்தை முடித்த பின் காவல்துறை பதிலளிக்கலாம் என்று அறிவுறுத்தினார். 

 

அதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மோதல் ஏற்பட்ட போது, அதைத் தடுக்காமல் காவல்துறை அனுமதித்தது குறித்து ஆதாரம் உள்ளது. வீடியோ ஆதாரங்களைப் பார்த்தால் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அத்துமீறி நுழைந்தது தெரியும். சட்டம்- ஒழுங்கை காக்க காவல்துறை தவறிவிட்டது என வாதிட்டார். 

 

இதையடுத்து, நீதிபதி சதீஸ்குமார், பொதுக்குழு வழக்கில் தீர்ப்பளித்த நிலையில், கட்சி அலுவலகம் செல்ல வேண்டிய அவசியம் என்ன? என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர், கட்சி அலுவலகத்திற்குள் நுழைய எந்தத் தடையும் இல்லை. வானகரத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமி, எந்த சரிபார்ப்பும் இல்லாமல் என் மீது குற்றம்சாட்டியுள்ளார். பொருளாளர் என்ற முறையில் அ.தி.மு.க. அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் சென்றார் என்று வாதிட்டார். 

 

எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அ.தி.மு.க. அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து கணினி, கோப்புகளை எடுத்துச் சென்றனர். அ.தி.மு.க. அலுவலகத்தை 400 பேர் முற்றுகையிட்டு எங்களை அனுமதிக்காமல் தடுத்தனர். இரு தரப்பு தகராறு முற்றியதால் சட்டம்- ஒழுங்கை காரணம் காட்டி அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டார். 

 

இதற்கு நீதிபதி, அலுவலகத்திற்கு சீல் வைத்ததை எதிர்க்கிறீர்களா? ஆதரிக்கிறீர்களா? என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பிடம் கேள்வி எழுப்பினார். ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர், அ.தி.மு.க. அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்று வாதிட்டார். 

 

எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒருங்கிணைப்பாளரான தன்னிடம் கட்சி அலுவலகத்தை ஒப்படைக்க மனுவில் ஓ.பன்னீர்செல்வம் கோரியுள்ளார். ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்க அ.தி.மு.க. அலுவலகம் ஒன்றும் தனிநபர் சொத்து அல்ல. ஓ.பன்னீர்செல்வம் தற்போது ஒருங்கிணைப்பாளரும் அல்ல, அவரைக் கட்சியிலிருந்து நீக்கி தீர்மானமும் நிறைவேற்றியுள்ளோம் எனத் தெரிவித்தனர். 


எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி சதீஸ்குமார், வரும் ஜூலை 11- ஆம் தேதி அன்று காலை முதல் மாலை வரை நடந்ததை வீடியோ ஆதாரங்களுடன் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நாளை மதியம் 02.30 மணிக்கு ஒத்திவைத்தார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.