Skip to main content

மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தும் உரிமைகளை இழந்திருக்கிறார்கள்: செந்தில் பாலாஜி சாடல்!

Published on 24/02/2018 | Edited on 24/02/2018
senthil balaji


அ.தி.மு.க. அமைச்சர்கள் மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது தமிழகத்திற்கு திட்டங்களை பெறுவதற்காக என்றுதான் சொன்னார்கள். ஆனால் அனைத்து விவகாரங்களிலும் தமிழகத்தின் உரிமையை இழந்திருக்கிறார்கள் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சர்களை சாடியுள்ளார்.

கரூரில் இன்று மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா டிடிவி தினகரன் அணி சார்பில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது,

மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளுக்கு முன்பாக மக்களுக்கு எதிரான இந்த துரோக ஆட்சி கலையும் என்று கூறினோம். கோர்ட்டில் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று நம்பியிருக்கிறோம்.

தீர்ப்பு வந்து விடும் என்று எதிர்பார்த்து தான் ஜெயலலிதா பிறந்தநாளான 24-ந்தேதிக்குள் ஆட்சி கலையும் என்று கூறினோம். இன்னும் ஒரு சில நாட்களில் தீர்ப்பு வந்து விடும். தீர்ப்பு வந்தவுடன் துரோக ஆட்சி வீட்டுக்கு செல்லும். டி.டி.வி. தினகரன் முதல்வராவார். அந்த ஆட்சி மக்கள் நலத் திட்டங்களை வழங்கும் அரசாக அமையும்.

டி.டி.வி தினகரனுடன் இணைந்து செயல்பட கிடைத்த வாய்ப்பை பெற்றதற்காக சந்தோ‌ஷமடைகிறேன். டி.டி.வி.க்கு பின்னால் யாருமே இல்லை என்று சொன்னார்கள். ஆனால் இப்போது ஆயிரக்கணக்கானோரை நீக்கி வருகிறார்கள். இது ஒரு பகுதிதான். இன்னும் 95 சதவீதம் பேர் டி.டி.வி. பக்கம் இருக்கிறார்கள்.

ஜெயலலிதாவின் கனவு திட்டமான மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வருகிறார். கடந்த காலங்களில் அ.தி.மு.க. அமைச்சர்கள் மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது தமிழகத்திற்கு திட்டங்களை பெறுவதற்காக என்றுதான் சொன்னார்கள். கடந்த சில மாதங்களாக இணக்கமாக இருந்து நீட், கதிராமங்கலம், நெடுவாசல், காவிரி போன்றவற்றில் தமிழகத்தின் உரிமையை இழந்திருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்