ADVERTISEMENT

ஜெயலலிதா வழியில் எடப்பாடி! சீனியர் செங்கோட்டையன் ஜுனியர் இ.பி.எஸ்க்கு புகழாரம்!

07:38 PM Sep 17, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 142ஆவது பிறந்தநாள் விழா ஈரோட்டில் அவர் பிறந்த இல்லத்தில் இன்று அரசு சார்பில் நடைபெற்றது. ஈரோட்டில் பெரியார் பிறந்த இல்லம் அரசு அருங்காட்சியகமாக 'பெரியார் - அண்ணா நினைவகம்' என்ற பெயரில் உள்ளது. இன்று தந்தை பெரியாரின் சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் அரசின் நலத்திட்ட உதவி, வங்கிக் கடனுதவிகளை பயனாளிகளுக்கு அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாட்டின் முதல்வராக மறைந்த தலைவர் எம்.ஜி.ஆர் இருந்தபோது பெரியாரின் நூற்றாண்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அதன் பிறகு ஜெயலலிதா முதல்வராக இருந்த போது பெரியார் கல்லூரிக்கு கட்சியின் சார்பில் நிதி உதவி வழங்கியதோடு தந்தை பெரியார் நினைவைப் போற்றும் வகையில், அரசின் சார்பில் ஒவ்வொரு வருடமும் சமூக நீதிக்காக பாடுபடுபவர்களுக்கு 'பெரியார் விருது' வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கட்சிகளைக் கடந்தும் ஒவ்வொரு தலைவர்களும் பெரியாரைப் போற்றி புகழ்ந்து வருகின்றனர்.

திராவிட இயக்கத்தின் வரலாற்றில் அனைவரும் சமநிலை அடைய வேண்டும் என்பதற்காக பணியாற்றிவர் தந்தை பெரியார். பெரியார், அண்ணா ஆகியோரின் வழியில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் ஆட்சி புரிந்தனர். அப்படித்தான் இப்போதும் ஜெயலலிதாவின் வழியில் நம்ம எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்தி வருகிறார். ஒரு நாடு எப்படிச் சீர்திருத்தத்தை உருவாக்க வேண்டும் என்பதற்கு தந்தை பெரியார் உதாரணமாக விளங்கினார். தமிழகத்தில் 1967 -க்குப் பிறகு திராவிட இயக்கம் வேரூன்றி இன்றும் நிலைத்து நிற்பதற்கு பெரியாரின் வழிகாட்டுதல் தான் காரணம்" என்றவர் மேலும், "தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் நீதிமன்ற வழிகாட்டுதலின் படி நடத்தப்பட்டு வருகிறது. ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு மன அழுத்தம் இருப்பதாக பெற்றோர்கள், மாணவர்கள் கூறியதையடுத்து வரும் 21ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்தக்கூடாது என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் என்றைக்கும் இருமொழிக்கொள்கை தான் தொடரும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். கூடுதல் பள்ளிக் கட்டணம் வசூலிப்பதாக இதுவரை 14 பள்ளிகள் மீது புகார் வந்துள்ளது. இதுதொடர்பாக விளக்கம் கேட்டு பள்ளிக் கல்வித்துறை சார்பில் சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்கு அறிவிக்கை வழங்கப்பட்டுள்ளது. இன்றைய பொருளாதார சூழலில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் இலவச மடிக்கணினி வழங்குவது என்பது சாத்தியமில்லை. தமிழகத்தில் மாணவர்கள், பெற்றோர்களின் மனநிலை மற்றும் கரோனா பரவல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தான் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து அரசு முடிவு எடுக்கும் "என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT