Advertisment

முதல்வர் சொன்னார்; முகர்ந்து பார்த்தார்! -கே.டி.ராஜேந்திரபாலாஜி காட்டிய கரோனா வேகம்!

ADMK MINISTER RAJENDRABALAJI

Advertisment

சில விஷயங்களை உள்ளூரில் இருப்பவர்களே தெரிந்திருக்க மாட்டார்கள். ஆனால், எங்கோ இருப்பவர் அதை அறிந்திருப்பார். அதன் அருமையை உணர்ந்திருப்பார். அப்படி ஒரு ஊராகத்தான் இருக்கிறது, ராஜபாளையம். அங்கே அரவிந்த் ஹெர்பல்ஸ் நிறுவனம் எடுத்து வரும் முயற்சியை அறிந்தவராக இருக்கிறார், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

தென் மாவட்ட கரோனா தடுப்பு ஆய்வுக்காக திருநெல்வேலி வந்த எடப்பாடி பழனிசாமி, தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியுடன் மதிய உணவு சாப்பிட்டபோது, “என்ன பாலாஜி.. உங்க மாவட்டத்துல.. அதான் ராஜபாளையத்துல இருக்கிற அரவிந்த் ஹெர்பல்ஸ் நிறுவனத்துல.. கரோனா வர்றத தடுக்கிறதுக்கான சித்த மூலிகைகள் அடங்கிய மருந்துப் பெட்டகம் தயார் பண்ணுறதா கேள்விப்பட்டேன். நீங்க நேர்ல போயி பார்த்துட்டு எனக்கு தகவல் சொன்னா நல்லாயிருக்கும்.” என்று கூற, மறுநாளே ராஜபாளையம் சென்று, அரவிந்த் ஹெர்பல்ஸ் நிறுவனத்தில் ஆஜராகிவிட்டார் ராஜேந்திரபாலாஜி.

அங்கிருந்த நிர்வாகிகள், ஆயுஷ் எனப்படும் ஆயுர்வேத, யுனானி, சித்தா, ஹோமியோ போன்ற மருத்துவ முறைகளின் அடிப்படையில் தாங்கள் தயாரித்த மருந்துப் பெட்டகங்களை, ராஜேந்திரபாலாஜியிடம் காட்சிப்படுத்தி, அந்த மருந்துகள் குறித்து விளக்கமும் அளித்துள்ளனர். மேலும், கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்பு கஷாயத்தை தொடர்ந்து மூன்று நாட்கள் அருந்தி வந்தாலே, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துவிடும் எனக்கூறி, கரோனாவை தடுக்கும் ஆற்றல் மிக்க மூலிகைகளையும் காண்பித்துள்ளனர். எந்த ஒரு நோயையும் வருவதற்கு முன்பே தடுத்து, உடலை ஆரோக்கியமாகப் பேணுவதற்கு,இதுபோன்ற மூலிகைத் தயாரிப்புகள், மனிதகுலத்துக்கு பெரிதும் துணை நிற்கின்றன என்று சிலாகித்துள்ளனர்.

Advertisment

ADMK MINISTER RAJENDRABALAJI

கரோனா தடுப்புக்கான ஹோமியோ சொட்டு மருந்தை அளித்ததோடு, கரோனா காப்பு எனப்படும்கிராம்பு, வசம்பு உள்ளிட்ட 18 வகை மூலிகை துகள்கள் கட்டப்பட்ட மஞ்சள் துணியை, அமைச்சரின் கையில் கட்டிவிட்டனர். ராஜேந்திரபாலாஜியும் அவருடன் சென்றவர்களும், கரோனா காப்பை ஒரே நேரத்தில் முகர்ந்து பார்த்து பரவசம் அடைந்திருக்கின்றனர்.

ரூ.500-லிருந்து ரூ.1000 வரை விலை மதிப்புள்ள அந்த கரோனா தடுப்பு மருந்துப் பெட்டகங்களை வாங்கிய ராஜேந்திரபாலாஜி, அவற்றை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு கொடுப்பதற்காக சென்னை சென்றுள்ளார் எனத் தகவல் கிடைக்க, நாம் அரவிந்த் ஹெர்பல்ஸ் நிறுவனத்தை தொடர்புகொண்டோம்.

அந்த நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவிலுள்ள பெண் ஊழியர் ஒருவர் பேசினார். “அது பத்துவிதமான மூலிகைகள் அடங்கிய கிட். அமைச்சரிடம் எங்கள் நிறுவனம் தந்த கிட் இன்னும் மார்க்கெட்டுக்கு கொண்டுவரவில்லை. விரைவிலேயே பொதுமக்களுக்கும் கிடைக்கும். அதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறோம்.” என்றார்.

உலகமே, கரோனாவை தடுப்பதற்கான மருந்தினைக் கண்டுபிடிப்பதற்கு தீவிரம் காட்டிவரும் நிலையில், தமிழகத்திலும் அதற்கான முயற்சியை, அரவிந்த் ஹெர்பல்ஸ் போன்ற நிறுவனங்கள் எடுத்துவருவது பாராட்டுக்குரியது.

corona virus rajendra balaji minister admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe