Advertisment

கடவுள் பெயரைச் சொன்னாலே மு.க.ஸ்டாலினுக்கு கோபம் வரும்!- அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி

tamilnadu minister rajendra balaji statement dmk mk stalin

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் அறிக்கைக்கு, தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வெளியிட்டுள்ள பதிலறிக்கையில் இதோ -திமுக- வின் தலைவர் ஸ்டாலின் நாளொன்றுக்கு ஒரு அறிக்கை வீதம், ஆள் வைத்து விடுத்து, தானும் தமிழ்நாட்டு அரசியலில் இருக்கிறேன் என்று காட்டுவதற்கு, படாதபாடுபடுகிறார் என்று விமர்சித்துள்ளார்.

Advertisment

திமுக தலைவர் ஒட்டுமொத்த உலகில் உள்ள எதிர்க்கட்சிகளுக்கெல்லாம் திருஷ்டி பரிகாரமாய் திமுகவை கொண்டு வந்து நிறுத்தியிருப்பதோடு, உலகையே அச்சுறுத்தும் கொள்ளைநோய் கரோனா காலத்தில், மலிவான அரசியல் நடத்தி, தன் இருப்பையும், தமிழ்நாட்டு மக்கள் மீது அவருக்கு இருக்கும் வெறுப்பையும் காட்டி வருகிறார்.

Advertisment

உலகளவில் குணப்படுத்துவதற்கு இதுவரையில் மருந்து இல்லாமலும், தடுப்பூசி கண்டறியப்படாமலும், கரோனா தொற்றுக்கு எதிராக மனிதகுலம் மன்றாடி வரும் நிலையில், அயராத போராட்டத்தாலும், அறிவார்ந்த முயற்சிகளாலும், அரசியல் கலப்பற்ற அப்பழுக்கற்ற உழைப்பாலும், கரோனாவிலிருந்து தமிழக மக்களை தற்காப்பதற்கும், நோயிலிருந்து மீட்பதற்கும், உயிரிழப்பு சதவீதத்தைக் கட்டுப்படுத்துவதிலும், எளிமை சாமானியர் எடப்பாடியாரின் அரசு,இந்திய மருத்துவ கவுன்சில் தொடங்கி(ICMR), உலக சுகாதார அமைப்பு வரை (WHO)பாராட்டும் வகையில் பணியாற்றி வருகிறது.

இதற்கு உதாரணம், ஒரே பத்திரிகையைச்சார்ந்து சுமார் 40- க்கும் மேற்பட்டவர்கள் கரோனா தொற்றுக்குள்ளான போது, அவர்கள் மொத்த பேரையும் அனுபவ மருத்துவத்தால், அயராத போராட்டத்தால் குணப்படுத்திக் காட்டிய தமிழக அரசின் நடவடிக்கை ஒன்றே, தூய தொண்டுக்கு பதச்சோற்று சான்றாகும். ஆனால், இதனையெல்லாம் உளமார பாராட்டுவதற்கு உள்ளமில்லாமல், இரவு, பகல் பாராது தொண்டூழியம் செய்து வரும் மருத்துவர்களும், செவிலியர்களும், லட்சோப லட்ச அரசு ஊழியர்களும் மனச்சோர்வு அடையும் விதத்தில், அறிக்கைகள் என்னும் பெயரிலே, மு.க.ஸ்டாலின்நடத்துகிற அக்கப்போர்கள் ஒட்டுமொத்த மக்களின் முகச் சுளிப்பிற்கு ஆளாகியிருக்கிறது.

இதனை மறைப்பதற்குக் கொள்முதல் செய்துமுடிக்காத மருந்துகளிலும், மருத்துவ உபகரணங்களிலும் முறைகேடு என்று அவதூறு பரப்புவதும், உலகளவில் கரோனா தொற்று வெகு தீவிரமாகப் பரவி வரும் நிலையில், பரிசோதனை கிட்டுகள், மருந்து மாத்திரைகள் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் அணிந்துகொள்ளும் பாதுகாப்புக் கவச உடைகள், செயற்கை சுவாசக் கருவிகள் போன்றவற்றின் தேவைகளும், அவற்றின் விலைகளும் உயர்வது தவிர்க்க முடியாதது என்பதையெல்லாம் அறியாதவராக மு.க.ஸ்டாலின், ஆளும் அரசு மீது அடிப்படை அறிவில்லாமல் பழிபோடுவதுஅவருக்குப் பொது அறிவும், பொதுவாகவே அறிவும் குறைவு என்பதையே காட்டுகிறது.

டெண்டர் விடுவதற்கு முன்பே முறைகேடு என்று அவதூறு வழக்கு தொடுத்து நீதிமன்றத்தில் மூக்கறுபட்ட பிறகும், முன்ஜாமீன் கழகமென பெயர் வாங்கிய பிறகும், திமுக, தன் போக்கை திருத்திக் கொள்ளவில்லையென்றால், இதற்கு,அந்த இயக்கத்தை வழி நடத்துபவரின் அறியாமையும், அதிகார வெறியுமே காரணமாகிறது. இப்போதும்கூட, கப்பல் வியாபாரியும், சேது சமுத்திரத்தையே தன் சொந்த வணிகத்திற்கு சூது சமுத்திரமாக்கி, பல கோடி ரூபாய் மக்கள்வரிப்பணத்தைக் கொள்ளையடித்த டி.ஆர்.பாலுவை வைத்து, அறிக்கை விட்டிருக்கிறார்மு.க. ஸ்டாலின்.

தான் நடத்தும் சாராய ஆலைக்கெதிராக போராடிய வடசேரி கிராம மக்களை குண்டர்களை வைத்து அடக்கு முறையில் ஈடுபட்டதுஇந்த டி.ஆர். பாலுதான், பொன் விளையும் பூமியாம் காவேரி படுகை மண்ணை, புல்லும் முளைக்கா பாலைவனமாக்க, ஸ்டாலின் ஒப்பந்த கையெழுத்து போட்ட போது, முன்னாள் மத்திய அமைச்சர் பழநி மாணிக்கத்துடன் சேர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி ஒப்புதல் வாக்குமூலம் வழங்கிய உத்தமர் என்பதை உலகமே அறியும்.

வீரநாராயணன் ஏரி எனப்படும் வீராணம் ஏரியை வைத்துப் பல கோடி ரூபாயைக் கொள்ள அடித்துக் கொண்டு, அந்தத் திட்டத்தையும் பாழடித்து, சிமெண்ட் குழாய்களை சப்ளை செய்த திருக்கழுக்குன்றம் சத்திய நாராயணா சகோதரர்களை சாகடித்தவர்கள் யார் என்பதை, மக்கள் அறிவார்கள். ஆனால், அதே வீராணம் திட்டத்தை, புதிய வீராணம் திட்டமாக அறிவித்து, மிகக் குறுகிய காலத்தில் அதை வெற்றிகரமாக செயல்படுத்தி, தலைநகர் சென்னை மக்களின் தாகத்தைப் போக்கியது ஜெயலலிதா என்பதை இப்பூவுலகே அறியும்.

ஒட்டுமொத்த இந்திய தேசமே உள்ளம் திறந்து பாராட்டுகிற அளவிற்கு காவேரி மேலாண்மை ஆணையம் அமைத்ததில் வெற்றி, ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டதில் வெற்றி, மீத்தேன் அபாயத்தைப் போக்கியதில் வெற்றி, மின்மிகை மாநிலமாய் ஆக்கியதில் வெற்றி, இரண்டாம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியும், திரைகடல் ஓடி தேன்தமிழ் நாட்டிற்கு திரவியம் தேடுவதிலும் வெற்றி, சட்டம் ஒழுங்கைக் காத்ததில் வெற்றி, ஊரடங்கு காலத்திலும் மக்களுக்கு உணவுப்பஞ்சம் வராமல் பார்த்துக் கொண்டதில் வெற்றி. இந்திய தேசம் முன்வைத்த விருதுகளில், மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலாக ஒன்பது விருதுகளைத் தட்டி வந்து, இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலம் தமிழ்நாடு என்னும் பெருமையை ஈட்டியதில் வெற்றி, தொடர்ந்து உணவு தானிய உற்பத்தியில் தமிழகமே முதலிடம் என்னும் சாதனையில் வெற்றி, இவ்வழியில் கொள்ளை நோய் கரோனாவுக்கு எதிராக தொண்டாற்றுவதில் இந்தியாவுக்கே வழிகாட்டும் மாநிலம் தமிழ்நாடு என்னும் பெருமையோடு எடப்பாடியாருக்கு மக்களிடம் உயர்ந்து வரும் செல்வாக்கைக் கண்டு, காணப் பொறுக்காத திமுக தலைவர் ஸ்டாலின், காழ்ப்புணர்ச்சி காய்ச்சல் எடுத்து கதறுகிறார்.

இதுவரை மு.க.ஸ்டாலின்- மருத்துவ நிபுணர்கள் மற்றும் வல்லுனர்கள் ஆலோசனைப்படி கரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்கோ, தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவதற்கோ. ஏதாவது ஒரு வகையில் ஒரு நல்ல ஆலோசனையை வெளியிட்டுள்ளாரா? அவர், அரசைக் குற்றம் சுமத்தி விடுகின்ற அறிக்கைகள் அனைத்துமே, அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக வெளியிடப்பட்ட அறிக்கைகள் என்பது பட்டுவர்த்தனமாக தெரிகிறது.

ஸ்டாலின், தனது நேற்றைய அறிக்கையில் கரோனா எப்போது முழுமையாகக் கட்டுப்படுத்தமுடியும் என்ற அறிக்கைக்கு, முதல்வர் அவர்கள் இறைவனுக்குத்தான் தெரியும் என்று பதிலளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் அவர்கள், யதார்த்தமாக இந்தக் கருத்தைச் சொல்லி இருக்கிறார். இதற்குக் காரணம், உலக சுகாதார அமைப்பு, இந்திய சுகாதாரத்துறை, மருத்துவ நிபுணர்கள், வல்லுனர்கள் அனைவருமே இந்த வைரஸ் தொற்றை ஒழிப்பது குறித்த கால அளவினைக்குறிப்பிடுவில்லை. வைரஸ் தொற்றை ஒழிக்க மருந்தும் கண்டுபிடிக்கவில்லை. இதனால்தான், முதல்வர் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது?

முதலமைச்சர் தெய்வ பக்தி உள்ளவர். மு.க.ஸ்டாலினுக்கு, கடவுள் பெயரைச் சொன்னாலே கோபம் வரும். இதன் வெளிப்பாடுதான் நேற்றைய தினம் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை.மேலும் மு.க. ஸ்டாலின், அவரது நேற்றைய அறிக்கையில், முதலில் விமானம் மூலமாகவும், ரயில் வழியாகவும் வந்திறங்கிய பயணிகள் மீதும், பிறகு கோயம்பேடு சந்தைவியாபாரிகள் மீதும் பழி போட்டார்கள் என்று முதலமைச்சரை குறிப்பிட்டுள்ளார்.

இந்த வைரஸ் தொற்று நோய் தமிழகத்தில் உருவானது அல்ல. இது தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் வந்தவர்களாலும், தமிழ்நாட்டிலிருந்து டெல்லி மாநாட்டிற்குச் சென்று வந்தவர்கள் மூலமாகவும், தமிழகத்தில் இந்தநோய் ஆரம்பத்தில் பரவியது. இதனை மறைத்து, மு.க.ஸ்டாலின், முதலமைச்சரைப் பற்றி அவதூறாகக் கருத்து வெளியிடுவது கண்டனத்துக்குரியது.

ஏதோ அ.தி.மு.க அரசுதான், இந்த நோயைத் தோற்றுவித்தது போலவும், இவர்தான் கட்டுப்படுத்துவது போலவும், தினந்தோறும் அறிக்கை விட்டு மக்களைக் குழப்புவதை ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும். தூங்குபவர்களை எழுப்பி விடலாம். தூங்குபவர்கள் போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்பது போல்தான், மு.க.ஸ்டாலின் அறிக்கையும் உள்ளது. நல்லவர்கள் என்பதே மருந்துக்கும் இல்லாத,நச்சுக்கிருமிகளின் நாற்றங்கால் ஆகிப்போனதிமுக, இனியும் மட்டரகமான அறிக்கைகள்விடுத்து மக்களின் வெறுப்புக்கு ஆளாவதை விட்டுவிட்டு தன்னைத் திருத்திக் கொள்வது உத்தமம்.

http://onelink.to/nknapp

இரவு பகல் பாராது, இமைகள் சோராது உழைக்கின்ற அரசின் மீது பழிபோடுகின்றபாவகாரியத்தை இனியும் தொடர்ந்தால்,கரோனா ஒழிவதற்கு முன்பே தமிழ்நாட்டு அரசியலிலிருந்து தி.மு.க அழிந்து போகும் என்பது சத்தியம். அதுசரி, பிறப்பு சான்றிதழை மட்டுமே தகுதியாக வைத்துக்கொண்டு, பின்வழியில் தலைமைக்கு வந்தவரிடமிருந்து, இதைத்தானேஎதிர்பார்க்க முடியும் என்று மனம் வருந்திப் பேசுகிற மக்களின் சாபத்திற்கு உள்ளாகாமல் திமுகவும் அதன் தலைமையும் தப்பிக்க வேண்டும் என்றால்,புரளி வித்தை செய்யும் கோமாளித்தனத்தை உடனே நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு, தனது அறிக்கையில் காரசாரமான அதிரடி கருத்துகளை வெளியிட்டுள்ளார், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி.

minister rajendra balaji Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe