Skip to main content

விலகியிருக்க வேண்டிய நேரத்தில் ஒன்றிணைய சொல்வதா? -மு.க.ஸ்டாலினை கலாய்க்கும் கே.டி.ராஜேந்திரபாலாஜி!

Published on 29/04/2020 | Edited on 29/04/2020
admk minister KD Rajendrapalaji


ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தபோது,

விருதுநகர் மாவட்டத்தில் 16 பேர் மட்டுமே கரோனா வைரஸ் சிகிச்சையில் உள்ளனர்.  தமிழக முதல்வர் எடப்பாடியார் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கரோனா வைரஸ் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்கும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் விருதுநகர் மாவட்ட அதிமுக மூலம் தொடர்ந்து நிவாரண பொருட்கள்  வழங்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் அமைச்சர்கள், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகிகள் தங்களால் இயன்ற உதவிகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர்.

 

admk minister KD Rajendrapalaji


நாட்டில் அரசியல் பேசக்கூடிய தருணம் இது கிடையாது. வீட்டில் இரு; விலகி இரு; தனித்திரு என்றுதான் பாரத பிரதமர், தமிழக முதல்வர் உட்பட உலக தலைவர்கள் கூறிவருகின்றனர். உலக தலைவர்கள் அனைவரும் விலகி இரு என்று கூறிவரும் நிலையில்,  திமுக தலைவர் ஸ்டாலின் மட்டும் ‘ஒன்றிணைவோம் வா’ என்று கூறி அனைவரையும் அழைத்துக் கொண்டு அரசியல் செய்து வருகிறார். ஸ்டாலினை பொருத்தவரையில்,  கரோனா வைரஸை வைத்து அரசியல்தான் செய்கிறாரே தவிர,  மக்களை காப்பாற்ற ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. அவரை செல்போனில் இரண்டு நாளில் 2 லட்சம் பேர் தொடர்பு கொண்டனர் என்பதெல்லாம் கட்டுக்கதை. மக்களை ஏமாற்றும் செயலில் ஸ்டாலின் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதிமுகவினர் உதவி செய்து வருவதுபோல்,  திமுகவினரும் உதவி செய்ய வேண்டுமென்று ஸ்டாலின் கூற வேண்டுமே தவிர, அரசை குறைகூறிக் கொண்டே இருக்கக்கூடாது, அரசின் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை ஸ்டாலின் குறை கூறிக்கொண்டே இருக்கக் கூடாது. பிரச்சனைகள் வரும்போது பொதுமக்கள் தேடி வருவது ஆலயங்களையும், கோவில்களையும்தான்.  இறைவனுக்கு செய்யும் தொண்டு ஏழைகளுக்கு செய்யும் தொண்டுதான். எனவே இந்த நேரத்தில்,  ஜோதிகா கூறிய கருத்துகளெல்லாம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். கடவுள் இல்லை என்று கூறும் நாத்திகர்களுக்கு,  மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கண்டிப்பாக வராது.”  என்றார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சூரியன் மக்களை வதைக்கிறது!” - வெயில் சூட்டை ஒப்பிட்ட ராஜேந்திர பாலாஜி!

Published on 26/02/2024 | Edited on 26/02/2024

 

 "The sun oppresses the people!" -Rajendra Balaji who compared the heat!

விருதுநகர் மாவட்டம் – சிவகாசியில், விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்குவது, ரத்ததான முகாம் எனப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி “மேடைக்கு முன்பாக வெயிலில் நீங்கள் காய்ந்து கொண்டிருக்கின்றீர்கள்.  

சூரியன் மக்களை வதைக்கிறது. அதனால்தான், நாங்களும் திறந்தவெளி மேடையில் நின்று வெயிலின் கொடுமையை அனுபவிக்கிறோம். சூரியன் ஏற்படுத்தும் கஷ்டத்தை உணர்ந்தால்தானே, அதிலிருந்து விடுபடுவதற்கு உரிய ஆயத்தப்பணிகளை, நாங்களும் செய்ய முடியும்? இந்தத் துன்பத்திலிருந்து மக்களை மீட்க வேண்டும். திமுக ஆட்சியின் மீது மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். அரசு ஊழியர்கள் தினந்தோறும் போராட்டம் நடத்துகிறார்கள்.

அதிமுக, மக்களை நம்பியே தேர்தலில் களம் காண்கிறது.  திமுகவோ, கூட்டணியை நம்பி தேர்தலில் நிற்கிறது. மக்கள் மத்தியில் அதிமுகவுக்கு மதிப்பு உயர்ந்துள்ளது. வெற்றி அருகில் வந்துவிட்டது. அதைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியின் சீர்கேடுகளைச் சொல்லியே வாக்கு சேகரிக்கவேண்டும். அப்போது, பட்டாசுத் தொழில் பிரச்சனை, நெசவாளிகள் பிரச்சனை, அரசு ஊழியர்கள் பிரச்சனை என்று பல்வேறு பிரச்சனைகளையும் சுட்டிக்காட்ட வேண்டும். 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறுவது உறுதி. அதனால்,  டெல்லியில் எடப்பாடி பழனிச்சாமியின் கரம் ஓங்கும். தமிழ்நாட்டின்  நலன் காக்க, அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் போராடுவார்கள்.அடுத்து வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக, நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்'' என்றார். 

Next Story

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து; ஒருவர் கைது!

Published on 18/02/2024 | Edited on 18/02/2024
sattur Fireworks Factory incident One person involved

விருதுநகர் அருகே உள்ள முத்துசாமிபுரத்தில் விஜய் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வந்துள்ளது. இந்த ஆலையில் நேற்று (17.02.2024) வழக்கம் போல பட்டாசு ஆலையில் பணிகள் நடந்து வந்தன. இத்தகைய சூழலில் மதியம் 12 மணியளவில் திடீரென பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. விபத்து நிகழ்ந்த சமயம் சுமார் 30 பேர் அங்கு பணியாற்றியதாகக் கூறப்பட்டது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதில் 7 பேரின் உடல் அடையாளம் காணப்பட்டதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் தீயை அணைத்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். பட்டாசுக்கு மருந்து கலக்கும்போது ஏற்பட்ட உராய்வின் மூலம் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ. 10 லட்சம் என்றும் படுகாயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டிருந்தார். மேலும் இந்த விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார். அதன்படி இந்த விபத்தில் உயிரிழந்த குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் பிரதமர் நிதியில் இருந்து நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில் வெடிவிபத்து சம்பவம் தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் விக்னேஷ், மேலாளர் ஜெயபால் மற்றும் போர்மேன் சுரேஷ்குமார் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதனையடுத்து பட்டாசு ஆலையின் போர்மேன் சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தலைமறைவாக உள்ள விக்னேஷ், ஜெயபால் ஆகிய இருவரையும் போலீசார் வலைவீசி தீவிரமாகத் தேடி வருகின்றனர்.