ADMK Members giving money to voters

தமிழகம் முழுவதும் பறக்கும்படை, கண்காணிப்பு குழு என ஏகப்பட்ட குழுக்களை அமைத்து அரசியல் கட்சிகளின் பணப்பட்டுவாடாவை தடுக்க பல்வேறு முயற்சிகளை எடுத்திருந்தது தேர்தல் ஆணையம். ஆனால், ஆணையத்தின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு பட்டுவாடா செய்ததில் ஆளும் கட்சி வெகு ஜோர்!தேர்தல் ஜனநாயகத்தை பாதுகாக்கிறோம் என தேர்தல் ஆணையம் எவ்வளவுதான் நம்பிக்கைக் கொடுத்தாலும், பணப்பட்டுவாடா செய்த திமுகவின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தினார்களே தவிர, அதிமுகவின் பட்டுவாடாவை தடுக்க நினைக்கவில்லை தேர்தல் அதிகாரிகள்.பல தொகுதிகளில் தேர்தல் பொறுப்பாளர்களும் உள்ளூர் காவல் துறையினரும் அதிமுகவின் வலிமையான வேட்பாளர்களிடம் விழுந்து விட்டனர்.

Advertisment

இதனால் அந்த தொகுதிகளிலெல்லாம் எவ்வித பதட்டமுமில்லாமல் பணப்பட்டுவாடாவை ஜோராக நடத்தி முடித்திருக்கிறது அதிமுக.சென்னையில் வேளச்சேரி, சோழிங்கநல்லூர், தி.நகர், விருகம்பாக்கம். மயிலாப்பூர், அண்ணா நகர், சைதாப்பேட்டை தொகுதிகளில், இன்று விடிய விடிய வாக்காளர்களுக்கு அதிமுக தரப்பில் ஏரியாக்களின் தன்மைக்கேற்ப 500 முதல் 1000 ரூபாய் வரை பணம் விநியோகிக்கப்பட்டது. மேலும், வாக்குப்பதிவு துனக்கிய பிறகு, ஏற்கனவே உருவாக்கப்பட்டிருந்த அதிமுகவின் குழு உறுப்பினர்கள், பணம் கொடுக்கமுடியாமல் விடுப்பட்ட பகுதிகளுக்குத் தனித்தனியாக பிரிந்து சென்று, வாக்குச் சாவடிக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தவர்களுக்கு வீட்டில் எத்தனை ஓட்டு இருக்கிறது என்பதை கணக்கிட்டு அதற்கான தொகையை கொடுத்து, இரட்டை இலைக்கு வாக்களிக்க வலியுறுத்தியிருக்கிறார்கள். அதன் பிறகு அவர்களும் ஓட்டுப் போட உற்சாகமாக கிளம்பிச் சென்றுள்ளனர்.

Advertisment

வாக்கு பதிவின் போது தேர்தல் அதிகாரிகளும் அரசியல் கட்சிகளின் முகவர்களும் வாக்குச்சாவடிகளில்தான் கவனம் செலுத்தினர். இந்த சூழலில், இவர்களின் கண்காணிப்பு இருக்காது என்பதை பயன்படுத்தி, விடுப்பட்ட வாக்காளர்களை பணத்தால் வளைத்தது அதிமுக. ஆக, வாக்குப்பதிவு நடந்து கொண்டிருக்கும் போதே பணப்பட்டுவாடா செய்வதில் வேகம் காட்டியிருக்கிறார்கள் சென்னையிலுள்ள அதிமுக வேட்பாளர்கள்.