/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_3722.jpg)
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகிமூன்று ஆண்டுகளுக்கு முன் அதிமுகவில் இணைந்த கோபி என்பவரை ஒரு கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை ஈச்சங்காடு பகுதியைச் சேர்ந்தவர் கோபி. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் நிர்வாகியாக இருந்த இவர், பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த நிலையில் நேற்று இரவு துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வந்த பொழுது மூன்று பேர் கொண்ட கும்பல் கோபியை அரிவாளால் தாக்கியுள்ளனர். அவர்களிடமிருந்து கோபி தப்பி ஓட முயன்றபோது, மூன்று பேர் கொண்ட கும்பல் கோபியை இடைமறித்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துவாக்குடி காவல்துறையினர் இறந்து போன கோபியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், முன் விரோதத்தால் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர். தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குநர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் அங்குள்ள தடயங்களை ஆய்வு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். கோபி மீதும் அப்பகுதியில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)