ADMK member involved in panchayat the site manager case

Advertisment

திருத்துறைப்பூண்டி அருகே ஊராட்சி முன்னாள் பணிதள பொறுப்பாளர் தாக்கப்பட்ட வழக்கில் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர், அவருடைய கணவர், மகன்கள் உள்ளிட்ட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மணலி எம்.கே. நகரில் வசிப்பவர் சுமத்ரா. இவர், மணலி ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார். இவருடைய கணவர் ரவி, மகன்கள் ரவிக்கண்ணன், ராஜ் கண்ணன்.

இந்த நிலையில், மணலி ஊராட்சியில் பணிதள பொறுப்பாளராக சாத்தங்குடியைச் சேர்ந்த செம்மலர் (42) என்பவர் பணியாற்றி வந்தார். ஊராட்சி மன்ற தலைவருக்கும் பணிதள பொறுப்பாளர் செம்மலருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு செம்மலர் நீக்கப்பட்டார். இந்தச்சூழலில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஊராட்சிமன்ற தலைவர் தரப்பிலும் செம்மலர் தரப்பிலும் இரு தரப்பினரும் தங்களைப் பற்றி அவதூறு பரப்புவதாக திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

Advertisment

இரு தரப்பினரையும் அழைத்த திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் சமாதானமாக பேசி அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் முன்னாள் பணி தள பொறுப்பாளர் செம்மலர், தற்போது மணலி கடை தெருவில் தையல் கடை நடத்தி வருகிறார். அவர் கடைக்கு சென்ற பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் அவரை சரமாரியாக தாக்கி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதில் படுகாயமடைந்த செம்மலரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக செம்மலர் திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் ஊராட்சி மன்ற தலைவர் சுமத்ரா, அவருடைய கணவர் ரவி, மற்றும் மகன்கள் ரவிக்கண்ணன், ராஜ் கண்ணன் உள்ளிட்ட 14 பேர் தன்னை கடுமையாக தாக்கியதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். புகாரை விசாரித்த திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன் உள்ளிட்டோர் ஊராட்சி மன்ற தலைவர் சுமத்ரா, அவருடைய கணவர் ரவி, உள்ளிட்ட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய அதே ஊரைச் சேர்ந்த குணசீலன் (வயது 32) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மீதமுள்ள 13 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.