
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்குத் தேவையான சட்டமன்றத் தொகுதிகளைவிட அதிக சட்டமன்றத் தொகுதிகளில் திமுக கட்சி வெற்றி பெற்றுள்ளதால், தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. நாளை (04/05/2021) சென்னையில் நடைபெறவுள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சிமன்றக் குழு தலைவராகத் தேர்வு செய்யப்படுகிறார். அதைத் தொடர்ந்து, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் வரும் 7ஆம் தேதி எளிமையாக நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில், தமிழகத்தின் முதல்வராக முதன்முறையாக மு.க.ஸ்டாலின் பதவியேற்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். அத்துடன், மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையும் பதவியேற்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி 75 சட்டமன்றத் தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி தோல்வி அடைந்தது. இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு சேலத்தில் இருந்து அனுப்பியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
அதைத் தொடர்ந்து, மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலினுக்கு என்னுடைய நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.