ADVERTISEMENT

முன்னாள் அமைச்சரை கைது செய்ய தனிப்படை அமைப்பு!

07:45 PM Dec 17, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க.வின் நிர்வாகியுமான ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய நான்கு தனிப்படைகளை அமைத்து விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

ஆவின் நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக சுமார் 3 கோடி ரூபாய் பணம் பெற்று மோசடி செய்ததாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்ட நிலையில், இதுதொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ராஜேந்திரபாலாஜி முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு மீதான வழக்கு நீதிபதி நிர்மல்குமார் தலைமையில் இன்று (17/12/2021) விசாரணைக்கு வந்தது. விசாரணையில் ராஜேந்திர பாலாஜி ஆவினில் வேலை வாங்கித் தருவதாக நண்பர்கள் மூலம் பணம் பெற்றதற்கு ஆதாரம் வலுவாக இருக்கிறது. எனவே அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது. அவரை கைது செய்து காவலில் வைத்து விசாரிக்க அவசியம் இருக்கிறது என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் ராஜேந்திர பாலாஜி தரப்பில் இது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வைக்கப்படும் பொய்ப் புகார் என்று வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இறுதியில் நீதிபதி நிர்மல்குமார், ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை முழுமையாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, தான் கைது செய்யக்கூடும் என்பதால், ராஜேந்திர பாலாஜி தலைமறைவானதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஒரு டி.எஸ்.பி., இரண்டு காவல்துறை ஆய்வாளர் தலைமையில் நான்கு தனிப்படைகளை அமைத்து விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த தனிப்படைகள் திருச்சி, சென்னை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விரைந்துள்ளதாகவும், அங்கு ராஜேந்திர பாலாஜியைத் தீவிரமாகத் தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT