ADVERTISEMENT

அதிமுக விவகாரம்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

06:50 PM Dec 15, 2023 | prabukumar@nak…

கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி கூடியது. உயர்நீதிமன்ற தீர்ப்பு வந்த அதே சமயத்தில் ஓபிஎஸ் தரப்பினர், பூட்டப்பட்டு இருந்த அதிமுக தலைமை அலுவலகத்தின் கதவுகளை உடைத்து உள்ளே சென்றனர். இந்த விவகாரத்தை அறிந்து தலைமை அலுவலகத்தின் வெளியே இபிஎஸ் தரப்பினரும் கூடினர். இதனால் அங்கு ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பினரிடையே மோதல் வெடித்தது. அதனைத் தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தை மயிலாப்பூர் வட்டாட்சியர் பூட்டி சீல் வைத்தார். அதன் பிறகு அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் உயர்நீதிமன்றம் வழங்கியது.

ADVERTISEMENT

சாவியைப் பெற்ற இபிஎஸ் தரப்பிலிருந்து சி.வி. சண்முகம் உட்பட சில அதிமுகவினர் தலைமை அலுவலகத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர். அதன்பின் தலைமை அலுவலகத்தில் இருந்த விலை உயர்ந்த பரிசுப் பொருட்களையும் ஆவணங்களையும் ஓபிஎஸ் தரப்பினர் எடுத்துச் சென்றதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக காவல்துறையினர் செயல்படுவதாகவும் தெரிவித்து இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி போலீஸ் டிஜிபி உத்தரவிட்டிருந்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சி.வி. சண்முகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்த வழக்கின் விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை” எனத் தெரிவித்தார். சிபிசிஐடி தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பாபு முத்து மீரான், “ராயப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான 4 வழக்குகளும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் ஓ. பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 40 பேர் முன் ஜாமீன் பெற்றுள்ளனர். 116 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணை சரியான கோணத்தில் முறையாக நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.

இதனைக் கேட்ட நீதிபதி, அதிமுக அலுவலகத்திலிருந்து ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்ட விவகாரத்தில் ஓ. பன்னீர்செல்வம் மீதான புகாரை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய வழக்கில் அதிருப்தி தெரிவித்தார். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தேவைக்கு அதிகமாகவே நேரத்தை வீணடித்துள்ளதுள்ளதாக உயர்நீதிமன்றம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது எனத் தெரிவித்தார். மேலும் இந்த வழக்கின் நிலை குறித்து 4 வாரத்தில் அறிக்கையாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT